அதிகப்பிரசங்கித்தனமாக நடந்துகொண்டாரா வேல்முருகன்?: அவையில் நடந்தது என்ன?

"வேல்முருகனுக்கு இறுதி எச்சரிக்கை வழங்கப்படுகிறது."
அதிகப்பிரசங்கித்தனமாக நடந்துகொண்டாரா வேல்முருகன்?: அவையில் நடந்தது என்ன?
ANI
1 min read

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று காலை நடைபெற்றது. அப்போது, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர் வேல்முருகன் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் குறித்து பேசினார். இவருடையக் கருத்துகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன. இதை எதிர்த்து வேல்முருகன் முழக்கம் எழுப்பியதாகத் தெரிகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், "வேல்முருகன் அதிகப்பிரசங்கித்தனமாக நடந்துகொள்கிறார். அவை மரபை மீறி வேல்முருகன் நடந்துகொள்ளக் கூடாது. இது வேதனையளிக்கிறது. வேல்முருகன் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற வகையில் கருத்தை முன்வைத்தார்.

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறுகையில், "வேல்முருகனுக்கு இறுதி எச்சரிக்கை வழங்கப்படுகிறது. இனி இப்படி நடந்துகொண்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன், சட்டபேரவையில் நடந்தது குறித்து விளக்கமளித்தார்.

"இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு, ஆட்சி மொழி குறித்தும் சில முக்கியமான விவாதம் நடைபெற்றது. அப்போது சில விளக்கங்களை பேரவை துணைத் தலைவரிடம் கேட்க விரும்பினேன்.

தமிழ்நாடு அரசு காவல் துறையில் தமிழ் வழியில் படித்த தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிமுகம் செய்த தமிழ்நாட்டில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% வேலைவாய்ப்பு உள்ளிட்ட தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்கிற அந்த சட்டத்தையே ஒரு துறை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தாமல் இருந்து வந்தது. இதை உயர் நீதிமன்றம் மூலம் நடைமுறைப்படுத்தியவன் வேல்முருகன்.

இதைக் குறிப்பிட்டு தமிழ்நாட்டில் தமிழ் மொழியை ஆட்சிமொழியாக, அலுவல் மொழியாக, பாட மொழியாக, பயிற்று மொழியாகக் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றேன்.

நான் என்ன சொல்கிறேன் என்பதைப் புரிந்துகொள்ளாமல் அதிமுக உறுப்பினர்கள், சேகர் பாபு போன்ற அமைச்சர்கள் எழுந்து கத்துகிறார்கள். பேசுவதற்கு வாய்ப்பு கேட்டு போராடிக் கொண்டிருக்கிறேன். வாய்ப்பு மறுக்கப்பட்டது. எனவே, நாடாளுமன்றத்தைப்போல இருக்கையிலிருந்து எழுந்து சென்று பேரவைத் தலைவர் முன்பு நின்று எனக்கு முழுவதுமாக என் கருத்தைப் பேசி பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றேன்.

இதற்கு அமைச்சர் சேகர் பாபு என்னை ஒருமையில் குறிப்பிட்டு பேசினார். அவருடைய இடத்துக்குச் சென்று என்னிடத்தில் இதுபோன்று ஒருமையில் பேசக் கூடாது என்றேன்.

பிறகு நான் இருக்கையில் அமர்ந்தபிறகு, சேகர் பாபு சொன்னதையே, வேல்முருகன் அதிகப்பிரசங்கித்தனமாக நடந்துகொள்கிறார் என முதல்வரும் அப்படியே கூறியது எனக்கு வருத்தமளிக்கிறது" என்றார் வேல்முருகன்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in