நடப்பு 2024-2025 கல்வியாண்டுக்கான தமிழகத்தின் பொறியியல் பொது கலந்தாய்வு மற்றும் துணைக் கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. இந்த மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் முதல்முறையாக சென்னை மண்டலத்தைப் பின்னுக்குத் தள்ளி மேற்கு மண்டலம் முதலிடம் பெற்றுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாட்டின் அரசுப் பொறியியல் கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கான பொது கலந்தாய்வு மற்றும் துணைக் கலந்தாய்வு நிறைவு பெற்றது. இந்தக் கலந்தாய்வு குறித்த தகவல்கள் மண்டலம் வாரியாக வெளியாகியுள்ளன.
அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல் மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில் 59,679 பொறியியல் படிப்புகளுக்கான இடங்களில் 50,039 (83.85%) இடங்கள் நிரம்பின. இதற்கு அடுத்து சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் 42,704 இடங்களில் 31,909 (75.61%) இடங்கள் நிரம்பின.
7,165 மாணவர்கள் சேர்க்கையுடன் 71.39 % இடங்கள் நிரம்பி 3-வது இடத்தில் உள்ளது விழுப்புரம் மண்டலம். இதைத் தொடர்ந்து 6,675 மாணவர்கள் சேர்க்கையுடன் 64.32 % இடங்கள் நிரம்பி 4-வது இடத்தில் உள்ளது வேலூர் மண்டலம்.
பொறியியல் மாணவர் சேர்க்கையை முன்வைத்து சன் நியூஸுக்குப் பேட்டியளித்த கல்வியாளர் ஜெயப்பிரகாஷ், `எந்தக் கல்லூரிகளில் நல்ல உள்கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்கள், கேம்பஸ் வேலை வாய்ப்புகள் போன்றவை உள்ளதோ, அதைத் தேடித்தான் தற்போது உள்ள மாணவர்கள் செல்கின்றனர். பொறியியல் படிப்பு மீதான மோகம் தொடர்கிறது. அதே நேரம் கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது’ என்றார்.