பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறோம்: அன்னபூர்ணா குழுமம் அறிக்கை

"துணை நின்ற வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் நன்றி."
பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறோம்: அன்னபூர்ணா குழுமம் அறிக்கை
2 min read

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா குழும நிர்வாகத் தலைவர் சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்து கேள்வியெழுப்பியதும், பிறகு மன்னிப்புக் கோரியதும் சர்ச்சையான நிலையில், பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாக அன்னபூர்ணா குழுமம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த செப்டம்பர் 11-ல் கோவையிலுள்ள கொடிசியா வளாகத்தில் தொழில் துறையினரைச் சந்தித்து கலந்துரையாடல் நடத்தினார். இதில் அன்னபூர்ணா நிர்வாக இயக்குநர் டி. சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். குறிப்பாக, இனிப்புக்கும், காரத்துக்கும் வெவ்வேறு ஜிஎஸ்டி விதிப்பது குழப்பத்தை உண்டாக்குவதாகக் குறிப்பிட்டிருந்தார். நகைச்சுவைப் பாணியில் கேட்டதால் இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் அதிகளவில் கவனம் ஈர்த்தது.

இதைத் தொடர்ந்து, அடுத்த நாள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா நிர்வாக இயக்குநர் டி. சீனிவாசன் மன்னிப்புக் கேட்கும் வீடியோ வெளியானது.

இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, அன்னபூர்ணா விவகாரம் தேசிய அளவில் பேசுபொருளானது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் அன்னபூர்ணா சீனிவாசனுக்கு ஆதரவான கருத்துகளை முன்வைத்தார்கள்.

வீடியோ வெளியானதற்கு, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்புக் கோரினார். அமெரிக்காவிலிருந்து இன்று காலை தமிழ்நாடு திரும்பிய முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதைக் கையாண்ட விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று என விமர்சித்தார்.

இந்த நிலையில் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாக அன்னபூர்ணா குழுமம் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

"சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் கோவை வர்த்தகச் சபை பிரதிநிதிகளுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த புதன்கிழமை, செப்டம்பர் 11 அன்று கலந்துரையாடினார். அப்போது எங்களுடைய நிர்வாக இயக்குநர் டி. சீனிவாசன் (தமிழ்நாடு ஹோட்டல் சங்கத் தலைவர், தென்னிந்திய ஹோட்டல் மற்றும் உணவகங்களின் சங்கத் துணைத் தலைவர்) உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் வெவ்வேறு பொருள்களுக்கு வெவ்வேறு ஜிஎஸ்டி விதிக்கப்படும் பிரச்னை குறித்து எழுப்பினார்.

இந்தக் கலந்துரையாடல் குறித்த காணொளிகள் அதிகளவில் பகிரப்பட்டன. இதற்கு அடுத்த நாள் சீனிவாசன் தனது சொந்த விருப்பத்தின் பெயரில் நிதியமைச்சரைச் சந்தித்தார். தகவல்களில் தவறு இல்லை, தவறான புரிதல் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் அவரைச் சந்தித்தார். தனிப்பட்ட முறையிலான இந்தச் சந்திப்பு தொடர்புடைய காணொளி சமூக ஊடகங்களில் தவறுதலாக வெளியிடப்பட்டன. இது நிறைய குழப்பம் மற்றும் தவறான புரிதலை ஏற்படுத்திவிட்டது.

இந்தக் காணொளி தவறுதலாகப் பதிவேற்றம் செய்யப்பட்டதாக தமிழ்நாடு பாஜக எக்ஸ் தளப் பக்கம் வருத்தம் தெரிவித்தது. மேலும், காணாளியைப் பதிவு செய்தவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொழில் துறையினர் மற்றும் அமைப்புகளுக்காக ஜிஎஸ்டி கூட்டத்தை நடத்தியதற்கு நிதியமைச்சர் மற்றும் எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

அவசியமற்ற கற்பனைகள் மற்றும் தவறான அரசியல் புரிதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம். இதை முடிவுக்குக் கொண்டு வந்து கடந்து செல்ல விரும்புகிறோம். இதை அனைவரும் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம். ஆதரவளித்த வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனவருக்கும் நன்றி" என்று அன்னபூர்ணா குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in