
காலவரம்பற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் இன்று (நவ.11) அறிவித்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிகிச்சை மருத்துவமனையில், நேற்று (நவ.13) இளைஞர் ஒருவரால் கத்தி குத்துக்கு ஆளானார் பணியில் இருந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் பாலாஜி. இந்த விவகாரத்தைக் கண்டித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக மருத்துவ சங்கங்கள் அறிவித்தன.
இந்நிலையில் கிண்டியில் இன்று (நவ.14) காலை மருத்துவ சங்கங்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அடுத்து, செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டியளித்தார் மருத்துவ சங்கங்களின் பிரதிநிதி. அவர் பேசியவை,
`நேற்று காலை தாக்கப்பட்ட மருத்துவரின் உடல் நிலை முன்னேறி வருகிறது. இந்த பிரச்னையின் தீவிரத்தன்மை புரிந்து, அதற்கு உடனடியாக ஒரு கூட்டத்தை நடத்தி, தீர்வு கொண்டுவரப்படும் என வாக்குறுதி அளித்த சுகாதார அமைச்சருக்கும், துணை முதல்வருக்கும், முதல்வருக்கும் நன்றி. மிக முக்கியமாக மருத்துவரைக் காப்பாற்றும் வகையில் குற்றவாளியை மேலும் செயல்படவிடாமல் தடுத்த நபருக்கு நன்றி.
நேற்று உயர்மட்ட அளவில் நடந்த கூட்டத்தில், சுகாதார அமைச்சர், கூடுதல் காவல்துறை தலைவர், சுகாதார செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டு நாங்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு போர்க்கால அடிப்படையில் அவை நிறைவேற்றபடும் என அறிவித்தனர். குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்’ என்றார்.
இதைத் தொடர்ந்து, நோயாளிகளின் நலன் கருதி, காலவரம்பற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெறுகிறோம். நாளை (நவ.15) முதல் பணியை தொடர முடிவு என அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம்.