எங்களை மீறி சென்னையை ஆட்சி செய்ய முடியாது: பா. இரஞ்சித்

"நாங்கள் ஒருபோதும் திருமாவளவனுக்கு எதிராக நிற்க மாட்டோம்."
கோப்புப்படம்
கோப்புப்படம்படம்: https://www.instagram.com/ranjithpa/
2 min read

ஆம்ஸ்ட்ராங் மறைவைத் தொடர்ந்து நடைபெற்ற அமைதிப் பேரணியில், தங்களை மீறி சென்னையை யாரும் ஆட்சி செய்துவிட முடியாது என இயக்குநர் பா. இரஞ்சித் பேசியுள்ளார்.

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 அன்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக இதுவரை மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னை எழும்பூரில் நேற்று அமைதிப் பேரணி நடைபெற்றது. எழும்பூர் ரமாடா ஹோட்டலுக்கு அருகே தொடங்கிய அமைதிப் பேரணி, ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்துக்கு அருகே நிறைவடைந்தது.

இந்தப் பேரணியில் உரையாற்றிய பா. இரஞ்சித் பேசியதாவது:

"இந்தக் கூட்டம் ஆம்ஸ்ட்ராங்குக்காகக் கூடிய கூட்டம். காசு கொடுத்தால் கூடுகிற கூட்டம் அல்ல இது. இந்த நிகழ்வில் பெரிய அளவில் அணி திரள் நிகழ வேண்டும். அப்படி நிகழ்ந்தால்தான், இங்குள்ள ஆட்சி, ஆட்சியாளர்கள், நிர்வாகிகள், காவல் துறையினர் என அனைவருக்கும் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு சரியான நீதியைப் பெற்றுத் தரும் வரை இந்த மக்கள் ஓய மாட்டார்கள் என்கிற பயம் வரும்.

எங்களுக்கு பிரதிநிதித்துவம் தரவில்லை எனக் கேள்வி கேட்கிறோம். அப்படி கேட்டால், எங்களுடையப் பின்னணியில் யாரோ இருக்கிறார்கள் என்கிறார்கள். ஆனால், நாங்கள் அம்பேத்கரின் பிள்ளைகள்.

எங்களுக்கான விடுதலை வேட்கை என்பது காலம் காலமாக இருக்கிறது. எனவே, யார் பின்னாடியும் சென்று நிற்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. யாரைப் பார்த்தும் நாங்கள் பயப்பட மாட்டோம்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலையை எளிதாகக் கடந்துவிடலாம் என்று எண்ணிவிட வேண்டாம். அம்பேத்கர் கற்றுக்கொடுத்த சட்ட வழிமுறைப் படி நடப்பவர்கள் நாங்கள். அவர்களுடைய வழியில் நாங்கள் போராடி வருகிறோம், போராடுவோம். இந்தப் படுகொலையின் பின்னணியில் உள்ள அயோக்கியர்களைக் கண்டுபிடிக்கும் வரை சும்மாவிட மாட்டோம்.

ஆம்ஸ்ட்ராங் இல்லையென்றதும் மகிழ்ச்சியடைந்துவிட வேண்டாம். எங்களை மீறி சென்னையை யாரும் ஆட்சி செய்துவிட முடியாது. 40 சதவீதத்துக்கு மேல் தலித்துகள் வசிக்கும் பகுதி இது.

நாங்கள் கட்சிக்காரர்களாக சேர்ந்து எம்எல்ஏ-வாக வெற்றி பெற்ற அடிமைகள் கிடையாது நாங்கள். இங்கே ஒரு மேயர் இருக்கிறார். திமுகவில் இருப்பதால் நீங்கள் மேயர் அல்ல. இடஒதுக்கீட்டால்தான் நீங்கள் மேயர் ஆக்கப்பட்டிருக்கிறீர்கள். கயல்விழி செல்வராஜ், நீங்கள் ஏன் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சராக மாறினீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அம்பேத்கர் வாங்கிக்கொடுத்த இடஒதுக்கீடு எனும் சட்டத்தின் அடிப்படையில் மாறியிருக்கிறீர்கள்.

நாங்கள் ஒருபோதும் திருமாவளவனுக்கு எதிராக நிற்க மாட்டோம். நீங்கள்தான் எங்களுடையக் குரல். உங்களை நாங்கள் ஒருபோதும் விட்டுவிட மாட்டோம்.

நமக்குப் பல தலைமை தேவைப்படுகிறது. ஒரு குரலாக ஓர் இடத்தில் நாம் ஒலிக்க முடியாது. பல இடங்களில் வேலைபார்க்க வேண்டியிருக்கிறது. பாஜக பின்னணியில் இருப்பதாகப் பேசுகிறார்கள். நாங்கள் பாஜகவுக்கு எதிரானவர்கள். எங்களுடைய வாக்கு யாரிடம் உள்ளது. திமுகவுக்கும், அதிமுகவுக்கும்தான் மாறிமாறி வாக்களித்தோம். நீங்கள் எங்களுக்காக என்ன செய்தீர்கள்? எங்களுடையப் பிரதிநிதித்துவம் இதுவரை சரியாகக் கொடுக்கப்படவில்லை. திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் என எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி.

இடஒதுக்கீடு மூலம் எம்எல்ஏ, எம்பி பதவியைப் பெற்றால், மக்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். திமுக, அதிமுக என கட்சிக்காரர் என்றால் இடஒதுக்கீட்டைப் பயன்படுத்த வேண்டாம்.

மற்ற சாதி பிரச்னையையும், தலித் பிரச்னையையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பதுதான் பிரச்னை. அது வேறு, இது வேறு" என்றார் பா. இரஞ்சித்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in