
சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பதிலுரை ஆற்றும்போது யாரும் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகத் திட்டமிட்டு தங்களை வெளியேற்றியிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் மதுரை காவலர் முத்துக்குமரன் கொலை தொடர்பாக பேசுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைத் தலைவரிடம் அனுமதி கோரினார். இதற்கு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அனுமதி மறுத்தார். இதைத் தொடர்ந்து, அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டார்கள். அமளியில் ஈடுபடுபவர்களை சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்ற காவலர்களுக்கு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டார்.
அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் சட்டப்பேரவையிலிருந்து வெளியேறிய நிலையில், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டும் அவையில் இருந்தார்கள்.
சட்டப்பேரவை வளாகம் வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
"நேரமில்லா நேரத்தில் அரசின் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக பேரவைத் தலைவரிடம் அனுமதி கேட்டோம். அவர் அனுமதி மறுத்தார். பிரதான எதிர்க்கட்சியின் கடமை நாட்டில் நடைபெறும் மக்கள் பிரச்னையை முறையாக அரசினுடையக் கவனத்துக் கொண்டு வருவது. அதை நாங்கள் சிறப்பாகச் செய்து வருகிறோம்.
ஆனால் இந்த அரசு நாட்டு மக்களின் பிரச்னையைப் பேச அனுமதி கொடுப்பதில்லை. இதே திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது இன்றைய முதல்வர் அன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்தவர் துரைமுருகன். இருவரும் அவ்வப்போது சட்டப்பேரவையில் ஜீரோ நேரத்தில் முக்கியமானப் பிரச்னை குறித்து நேரமில்லா நேரத்தில் எழுந்து பேசுவார்கள். அதற்கு உரிய பதிலை நாங்கள் அளித்திருக்கிறோம்.
அதே நோக்கத்தில் தான் இன்று அதிமுக சார்பாக நாட்டில் நடந்த பிரச்னை குறித்து பேச முற்பட்டோம். அதற்கு அனுமதி கொடுக்க மறுத்து எங்களை வெளியேற்றியிருக்கிறார்கள்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் முத்துக்குமரன் என்ற காவலர். இவரும் இவரது நண்பரும் கஞ்சா வியாபாரி பொன்வண்ணன் மற்றும் அவருடைய நண்பர்களால் சராமரியாக வெட்டப்பட்டுள்ளார்கள். இதில் காவலர் முத்துக்குமரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவருடைய நண்பர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொலை செய்துவிட்டு தப்பிய கஞ்சா வியாபாரி பொன்வண்ணன் தற்போது தான் பிணையில் வெளியில் வந்த நிலையில், இந்தப் படுகொலைச் சம்பவத்தை அரங்கேற்றியிருக்கிறார்.
போதைப் பொருள்களைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த அரசு எந்தவித கடுமையான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
முத்துக்குமரன் கொலை தொடர்பாக காவல் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் என்ன பதில் சொல்வார் என நாங்கள் எதிர்பார்த்தோம். அவருடையக் கவனத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இதைச் செயல்படுத்தினோம்.
காவல் துறை இனியாவது காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும் என்ற கருத்தை முன்வைக்க வந்தோம். ஆனால், அதற்கு அனுமதிக்கவில்லை.
கடந்த மார்ச் 25 அன்று இரவு சுமார் 11 மணியளவில் பயிற்சி மருத்துவர் சிவகங்கை அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள பயிற்சி மருத்துவர் தங்கும் விடுதிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது அவரை மர்ம நபர்கள் வழிமறித்து வாகனத்தில் கடத்த முயற்சித்தபோது, அதிலிருந்து அவர் தப்பித்துள்ளார். இது பயிற்சி மருத்துவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசுவதற்காக அனுமதி கேட்டேன். இதில் என்ன பிரச்னை இருக்கிறது. இது மக்களுடையப் பிரச்னை. இதை அரசினுடையக் கவனத்துக்குக் கொண்டு வரத்தான் அனுமதி கோரினோம்.
சட்டப்பேரவைத் தலைவர் திட்டமிட்டு எங்களை வெளியேற்றியிருக்கிறார். இந்த அரசு மக்களைப் பற்றி கவலைப்படாத அரசு. குடும்பத்தைப் பற்றி கவலைப்படக்கூடிய அரசு. இன்றைய தினம் முதல்வரின் மகன் பேசவிருப்பதால், யாரும் தலையிடக் கூடாது. ஒருவரும் எந்தப் பிரச்னையையும் பேசக் கூடாது என்கிறார்கள்.
இதுவொரு சர்வாதிகாரம். மக்களுக்காகவே சட்டப்பேரவை. சட்டப்பேரவைக்காக மக்கள் அல்ல. அதை முதல்வர் உணர வேண்டும். சட்டப்பேரவைத் தலைவர் உணர வேண்டும். மக்களுடையப் பிரச்னையைப் பேசுவதற்காக நாங்கள் வந்துள்ளோம்.
ஸ்டாலின் தலைமையிலான அரசு அவருடைய வீட்டு மக்கள் அதிகாரத்தில் இருந்துகொண்டு அவருடையப் (துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்) பதிலுரையில் யாரும் தடையாக இருக்கக் கூடாது, அது எவ்வளவு முக்கியப் பிரச்னையாக இருந்தாலும் சட்டப்பேரவையில் பேச அனுமதி கிடையாது என்கிற சர்வாதிகாரப்போக்கை சட்டப்பேரவையில் அரங்கேற்றியிருக்கிறார்கள். இது கண்டனத்துக்குரியது.
நாங்கள் பேசிய பிறகு உங்களுடையப் பதிலுரையைத் தொடங்குங்கள். அவை முன்னவரும் முதல்வரும் சட்டப்பேரவைத் தலைவரும் எங்களை வெளியேற்றுவதிலேயே குறிக்கோளாக இருக்கிறார்கள். அவையில் எங்களுடையப் பேச்சைக் கேட்க அவர்கள் தயாராக இல்லை. அரசு மீது ஏதாவது குறை சொல்லிவிடக் கூடாது என்பதற்காகத் திட்டமிட்டு அவையிலிருந்து வெளியேற்றியிருக்கிறார்கள்" என்றார் எடப்பாடி பழனிசாமி.