
நல்லதை நினைத்தே மத்திய அரசுக்குக் கடந்தமுறை கடிதம் அனுப்பினோம், ஆனால் நிதி வரவில்லை எனப் பேசியுள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து இன்று (டிச.1) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் பேசியவை பின்வருமாறு,
`ஃபெஞ்சல் புயலால் கனமழை பெய்தாலும், தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை பணிகள் காரணமாக பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை. பொதுமக்களுக்கு இன்றுவரை 9,10,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. எதையும் எதிர்கொண்டு சமாளிக்கும் வகையில் சென்னை தயார் நிலையில் உள்ளது.
மாநிலத்தின் பிற மாவட்டங்களின் நிலையை தொடர்ந்து கேட்டு வருகிறேன். அந்த வகையில் வரலாறு காணாத அளவுக்கு விழுப்புரத்தில் மழை பெய்திருக்கிறது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 49 செ.மீ., நெம்மேலி பகுதியில் 46 செ.மீ., வானூரில் 41 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டு, நிவாரணப் பணிகளை வேகப்படுத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அனுப்பி வைத்திருக்கிறேன். விழுப்புரம் மாவட்டத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள மாநில, தேசிய பேரிடர் படையைச் சேர்ந்த 12 குழுக்கள் அங்கே விரைந்திருக்கின்றன.
இன்னும் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஒரளவுக்காவது மழை குறைந்த பிறகே பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்கப்படும். பயிர் சேதத்தைப் பொறுத்தவரை மழை நீர் வடிந்தவுடன் முறையாக கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன் பிறகே இழப்பீட்டுத் தொகை வழங்குவது குறித்து முடிவு செய்யமுடியும்.
சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் நாளை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தவிருக்கிறோம். அங்கே கலந்துபேசி முடிவெடுத்து மத்திய அரசுக்கு விளக்கமாக கடிதம் அனுப்புவோம். நல்லதை நினைத்தே கடந்தமுறை கடிதம் அனுப்பினோம். ஆனால் (நிதி) வரவில்லை. இந்த முறையும் வரவில்லை என்றால் கடந்த முறை எப்படி சமாளித்தோமோ அப்படி சமாளிப்போம்’ என்றார்.