தமிழ்நாட்டுக்கு நல்ல தலைவர்கள் தேவை: தவெக தலைவர் விஜய்

போதைப்பொருள் பழக்கங்களில் ஈடுபட வேண்டாம் என மாணவர்களை உறுதிமொழி ஏற்க வைத்தார் விஜய்.
தமிழ்நாட்டுக்கு நல்ல தலைவர்கள் தேவை: தவெக தலைவர் விஜய்

தமிழ்நாட்டுக்கு நல்ல தலைவர்கள் தேவைப்படுவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுக்க 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொகுதிவாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்குப் பரிசளித்து கௌரவிக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது விழா சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 21 மாவட்டங்களில் 800 மாணவர்களுக்கு இன்று விருதுகள் வழங்கப்படவுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்று விருதுகளை வழங்கி வருகிறார். விருது வழங்கும் பணியைத் தொடங்குவதற்கு மாணவர்கள் மத்தியில் விஜய் உரையாற்றினார். நல்ல தலைவர்கள் தேவை, போதைப்பொருள் பழக்கங்களில் ஈடுபட வேண்டாம் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். போதைப்பொருள் பழக்கங்களில் ஈடுபட வேண்டாம் என மாணவர்களை உறுதிமொழி ஏற்க வைத்தார் விஜய்.

விஜய் பேசியதாவது:

"நீங்கள் அனைவரும் தற்போது அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரவிருக்கிறீர்கள். வாழ்க்கையில் என்னவாக ஆக வேண்டும் என்கிற தெளிவு உங்களில் சிலருக்கு இருக்கலாம்.

இதில் ஒரு சில பேருக்கு மட்டும் சிறிய குழப்பம், தொய்வு ஏற்படலாம். எல்லா துறையும் நல்ல துறைதான் என்று அவர்களுக்குக் கூற விரும்புகிறேன். நீங்கள் எந்தத் துறையைத் தேர்வு செய்கிறீர்களோ, அதில் முழு ஈடுபாட்டுடன் 100 சதவீத உழைப்பைப் போட்டால், யாராக இருந்தாலும் வெற்றி நிச்சயம். எனவே, உங்களுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுங்கள்.

அதிலுள்ள வாய்ப்புகளைத் தெரிந்துகொள்ளுங்கள். பெற்றோர்களுடனும், ஆசிரியர்களுடனும் அதுகுறித்து ஆலோசனை நடத்துங்கள். மாணவர்களை வழிகாட்டுவதற்காக நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களைச் சந்தித்து உரையாடுங்கள்.

பொதுவாக நாம் ஒரு துறையைத் தேர்வு செய்யும்போது, அதில் உள்ள தேவை என்ன என்பதைப் பார்ப்போம். உதாரணத்துக்கு, மருத்துவம் மற்றும் பொறியியல் மட்டும்தான் நல்ல துறை என்று சொல்லிவிட முடியாது. நம் தமிழ்நாட்டில் உலகத் தரத்தில் மருத்துவர்கள், பொறியியயாளர்கள், வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். இங்கு எது இல்லை என்றால், எது தேவைப்படுகிறது என்றால் நல்ல தலைவர்கள்.

நான் தலைவர்கள் என்பதை அரசியல் ரீதியாக மட்டும் சொல்லவில்லை. நீங்கள் ஒரு துறையைத் தேர்வு செய்கிறீர்கள் எனும்போது, அதில் நீங்கள் சிறந்து விளங்கினால், ஒரு தலைமைப் பொறுப்புக்கு விரைவாக வர முடியும். இதைக் குறிப்பிட்டுதான் இன்னும் நிறைய தலைவர்கள் தேவை என்று கூறினேன்.

எதிர்காலத்தில் அரசியலும் ஒரு துறையாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும், தலைவர்களாக வர வேண்டும்.

நீங்கள் படித்துக்கொண்டிருக்கும்போதே மறைமுகமாக அரசியலில் ஈடுபட முடியும். நாள்தோறும் செய்தித்தாள்களைப் படித்தாலே அரசியல் குறித்து தெரிந்துகொள்ளலாம். இங்கு செய்தி வேறு, கருத்து வேறு என்பது தெரியவரும்.

சமீப காலங்களாக சமூக ஊடகங்களில் நல்லதைக் கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும், நல்லவர்களைக் கெட்டவர்களைப்போலவும், கெட்டவர்களை நல்லவர்களைப்போலவும் மாற்றி காண்பித்து வருவதைப் பாருங்கள், கவனியுங்கள். ஆனால், எது உண்மை, பொய் என்பதை மட்டும் ஆராயக் கற்றுக்கொள்ளுங்கள்.

அப்போதுதான் உண்மையில் நாட்டில் என்ன பிரச்னை, மக்களுக்கு என்ன பிரச்னை, சமூகத்தின் தீமைகள் என்ன என்பது உங்களுக்குத் தெரிய வரும். ஒரு சில அரசியல் கட்சிகள் செய்து வரும் பொய்யான பிரசாரங்களை நம்பாமல், எது உண்மை, எது பொய் என்பதை அலசி ஆராய்ந்து, நல்ல தலைவர்களைத் தேர்வு செய்யும் ஒரு விசாலமான உலகப் பார்வை உங்களுக்கு வந்துவிடும். இதைவிட ஒரு சிறந்த அரசியல் எதுவும் இருக்க முடியாது. இதைவிட இந்த நாட்டுக்கு நீங்கள் செய்யக்கூடிய உங்களுடையப் பங்களிப்பு வேறு எதுவும் இருக்க முடியாது.

இறுதியாக ஒரு விஷயம். நண்பர்களும், நட்பும். பெற்றோர்களைவிட நண்பர்களோடு அதிக நேரங்களை செலவிட வேண்டிய சூழல் உருவாகலாம். உங்களுடைய நட்பு வட்டாரத்தில் ஏதேனும் ஒரு விஷயம் தவறாக இருக்கிறது என்றால், யாராவது தவறான பழக்கங்களில் ஈடுபட்டிருந்தால், அவர்களை நல்வழிப்படுத்த முயற்சி செய்யுங்கள். தவறான பழக்கங்களில் ஈடுபடக் கூடாது. நான் முன்கூட்டியே கூறியதைப்போல உங்களுடைய அடையாளத்தை எந்தக் காரணத்துக்காகவும் இழந்துவிட வேண்டாம்.

சமீப காலங்களில் போதைப்பொருள்களின் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகமாகிவிட்டது. பெற்றோர், அரசியல் இயக்கத் தலைவர் என்கிற முறையில் எனக்கே இது கொஞ்சம் அச்சமாகத்தான் இருக்கிறது.

போதைப்பொருள்களைக் கட்டுப்படுத்துவது அரசின் கடமை. இதிலிருந்து இளைஞர்களைக் காப்பாற்றுவது அரசின் கடமை. ஆளும் அரசு இதைத் தவறவிட்டுள்ளார்கள் என்பதைப் பற்றி பேச நான் இங்கு வரவில்லை. அதற்கான மேடை இதுவல்ல.

சில நேரங்களில் அரசாங்கத்தைவிட நம்முடைய வாழ்க்கையை நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். உங்களுடைய சுய கட்டுப்பாடு, சுய ஒழுக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்" என்று விஜய் பேசினார்.

மேலும், தற்காலிக மகிழ்ச்சியைத் தரக்கூடிய விஷயங்களில் ஈடுபட மாட்டேன், போதைப்பொருள் பயன்பாட்டில் ஈடுபட மாட்டேன் என மாணவர்களை விஜய் உறுதிமொழி ஏற்க வைத்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in