மகாவிஷ்ணு சமூக விரோதியோ, தீவிரவாதியோ கிடையாது என்றும் பிணை கோரி விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் தரப்பு வழக்கறிஞர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் சர்ச்சைக்குரிய வகையில் அறிவியலுக்குப் புறம்பாக பேசி, மாற்றுத்திறனாளி ஆசிரியரை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டார் பரம்பொருள் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு. சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள மகாவிஷ்ணுவை செப்டம்பர் 20 வரை நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய மகாவிஷ்ணு தரப்பு வழக்கறிஞர் பாலமுருகன், பிணை கோரி விண்ணப்பித்துள்ளதாகக் கூறினார்.
"விமான நிலையம் வந்தவரை உதவி காவல் ஆணையர் தலைமையில் கைது செய்துள்ளார்கள். சுமார் 6 மணி நேரம் அவர் எங்கு வைக்கப்பட்டிருந்தார் என்ற தகவலும் இல்லை. மகாவிஷ்ணுவின் குடும்பத்தினர், நண்பர்களிடத்தில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. நேரடியாக மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்ப்படுத்தியுள்ளார்கள். மகாவிஷ்ணு தரப்பினரிடம் கையெழுத்து வாங்கிவிட்டு நடைமுறையைப் பின்பற்றியிருக்க வேண்டும். இது எதுவும் கடைபிடிக்கப்படவில்லை.
சுமார் 200 பேர் விமான நிலையம் சென்று கைது செய்ய மகாவிஷ்ணு சமூக விரோதியா, தீவிரவாதியோ கிடையாது. இந்த வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம். பிணை கோரி விண்ணப்பித்துள்ளோம்" என்றார் அவர்.
திருவொற்றியூர் காவல் நிலையத்திலும் மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.