கணிப்புகளைப் பொய்யாக்கி வெற்றி பெற்றுள்ளோம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

இங்கிருந்து போகும் 40 எம்.பி.க்கள் என்ன செய்யப் போகிறார்கள் எனச் சில அதிமேதாவிகள் கேட்கிறார்கள். அவர்கள் தங்களைத் தாங்களே அறிவாளி என நினைத்துக் கொள்பவர்கள்.
கணிப்புகளைப் பொய்யாக்கி வெற்றி பெற்றுள்ளோம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
ANI

கோவை கொடிசியா மைதானத்தில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அவரின் உரை பின்வருமாறு:

`போன முறை நான் இங்கே (கோவை) கலந்து கொண்ட கூட்டம் இந்தியா முழுவதும் ட்ரெண்ட் ஆனது. எட்டு முறை தமிழ்நாட்டுக்கு வந்து பிரதமர் கட்டமைத்த பிம்பத்தை அருமைச் சகோதரர் ராகுல் காந்தி அவர்கள் ஒரே ஒரு ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து முடிவு கட்டிவிட்டார். அன்று அவர் வழங்கிய இனிப்பு எதிர்க்கட்சியினரின் கணிப்புகளைப் பொய்யாக்கியது’.

`நாற்பது நமதே என்று நான் முழங்கினேன். அது சாத்தியமா என்று பலரும் யோசித்தனர் ஆனால் எனக்கு நம்பிக்கை இருந்தது. உங்கள் ரத்தத்தைச் சிந்தி நீங்கள் உழைத்தீர்கள். இந்த வெற்றிக்குக் காரணமான திமுக தொண்டர்கள், இண்டியா கூட்டணிக் கட்சித் தோழர்கள் இருக்கும் திசையை நோக்கி நான் வணங்குகிறேன்’ என்று கைகூப்பித் தன் நன்றியைத் தெரிவித்தார்.

`இங்கிருந்து போகும் 40 எம்.பி.க்கள் என்ன செய்யப் போகிறார்கள் எனச் சில அதிமேதாவிகள் கேட்கிறார்கள். அவர்கள் எல்லாம் தங்களைத் தாங்களே அறிவாளி என நினைத்துக் கொள்பவர்கள். ஜனநாயகத்தின் அடிப்படை கூடத் தெரியாத அவர்கள் நம்மை இழிவுபடுத்தவில்லை, நாட்டு மக்களை இழிவுபடுத்துகிறார்கள்’ எனத் தன் பேச்சில் எதிர்க்கட்சிகளுக்குக் கண்டனத்தைத் தெரிவித்தார்.

`மக்களுக்கான நம் குரல் இந்த முறை நாடாளுமன்றத்தில் இன்னும் வலுவாக ஒலிக்கப்போகிறது. நம் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த முறை இந்தியாவின் பன்முகத்தன்மையை, சமூகநீதியை, மதச்சார்பின்மையைக் காப்பதற்காகப் (நாடாளுமன்றத்தில்) பேச வேண்டும். வாக்களித்த மக்களுக்கு நாம் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும்’ என்று புதிதாகத் தேர்வாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரை கூறினார் முதல்வர்.

`இந்த வருடம் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு ஆண்டு, நாற்பது தொகுதிகளிலும் நாம் பெற்ற வெற்றி அவருக்கு நாம் தரும் சிறப்பான நூற்றாண்டு பரிசு. இந்த 39 நாடாளுமன்றத் தொகுதிகளின் வெற்றியை 234 சட்டமன்றத் தொகுதிவாரியாகக் கணக்கிட்டால், திமுக கூட்டணி 221 தொகுதிகளில் முன்னிலை வகித்திருக்கிறது. அடுத்து வரும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் நம் கூட்டணி வேட்பாளர் அன்னியூர் சிவாதான் வெற்றி பெறுவார்’ என நம்பிக்கையுடன் பேசினார் ஸ்டாலின்.

`எங்களை நம்பி நீங்கள் (மக்கள்) பொறுப்புகளைக் கொடுத்திருக்கிறீர்கள், உங்கள் நம்பிக்கை வீண் போகாது. வரும் சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நம் கூட்டணி வெற்றி பெற்றது எனும் இலக்கை நோக்கி நம் பயணத்தைத் துவங்குவோம். தலைவர் கலைஞர் புகழ் ஓங்குக, தமிழ்நாடு வெல்க, நன்றி வணக்கம்!’ எனக் கூறித் தன் உரையை நிறைவு செய்தார்.

இந்தக் முப்பெரும் விழாவில் தமிழ்நாட்டில் உள்ள இண்டியா கூட்டணித் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in