பள்ளி மாணவிகள் மத்தியில் சொற்பொழிவாற்ற சிறப்பு அழைப்பாளராக மகாவிஷ்ணுவை அழைக்குமாறு பள்ளி மேலாண்மைக் குழு பரிந்துரைவில்லை என அசோக் நகர் அரசு மகளிர் பள்ளியின் மேலாண்மைக் குழுத் தலைவர் சித்ரகலா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார்.
செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சித்ரகலா பேசியவை பின்வருமாறு:
` பள்ளியின் மேலாண்மைக் குழு மகாவிஷ்ணுவின் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்தது எனச் சிலர் கூறி வருகின்றனர். ஆனால் எங்களுக்கும் அந்த சொற்பொழிவு நிகழ்ச்சிக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. அதை நாங்கள் ஏற்பாடு செய்யவில்லை. ஆகஸ்ட் 28-ல் இந்த சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது என்று பள்ளியின் தலைமையாசிரியர் உள்ளிட்ட யாருமே எங்களுக்கு முன்கூட்டியே தகவல் வழங்கவில்லை.
பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தை நாங்கள் இன்னமும் கூட்டவில்லை. பள்ளி மேலாண்மைக் குழுவுக்கான தேர்தல் கடந்த மாதம் 24-ல் நடந்தது, அதைத் தொடர்ந்து அந்த ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி 28-ல் நடந்தது. எங்கள் குழு உறுப்பினர்களிடம் அந்த சொற்பொழிவு குறித்து எந்தத் தகவலும் எங்களிடம் தெரிவிக்கப்படவில்லை.
பள்ளியில் எந்த மாதிரியான சொற்பொழிவு நடந்தது என்பது எங்களுக்கே நேற்றுதான் தெரியும். அரசுப் பள்ளியில் இவ்வாறான நிகழ்ச்சிக்குப் பள்ளி மேலாண்மைக் குழு அனுமதிக்காது. பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் என்ற பெயரில் என்னிடம் பள்ளிக்கல்வித்துறையினர் விசாரித்தனர். ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சிக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என அவர்களிடம் நாங்கள் தெரிவித்துவிட்டோம்’ என்றார்.