நிதிக்காக கொள்கையை விட்டுக்கொடுக்கமாட்டோம்: அமைச்சர் அன்பில் மகேஸ்

பி.எம். ஸ்ரீ திட்டத்தின் கீழ் நிதியைக் கேட்கவில்லை, அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ்தான் நிதியைக் கேட்கிறோம் என அவரிடம் தெரிவித்தோம்
நிதிக்காக கொள்கையை விட்டுக்கொடுக்கமாட்டோம்: அமைச்சர் அன்பில் மகேஸ்
1 min read

எந்த ஒரு காரணத்தினாலும் கொள்கையை விட்டுகொடுத்து மத்திய அரசிடமிருந்து நிதி பெற மாட்டோம் என்று திருச்சியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்.

நடப்பாண்டில் தமிழ்நாட்டுக்கான அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியின் முதல் தவணையை விடுவிக்காமல் உள்ளது மத்திய அரசு. இது குறித்துத் தன் பேட்டியில் தமிழக அரசின் நிலைப்பாட்டை விளக்கியுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஸ். பேட்டியில் அவர் பேசியவை பின்வருமாறு:

`எங்கள் தலைமைச் செயலாளர் தெளிவாக ஒரு கடிதத்தை மத்திய அரசுக்கு எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் `அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் எங்களுக்குச் சேர வேண்டிய தவணை நிதியை நாங்கள் கேட்கிறோம். ஆனால் நீங்கள் பி.எம். ஸ்ரீ திட்டத்தில் சேரவில்லை என்று கூறுகிறீர்கள். பி.எம். ஸ்ரீ திட்டத்தில் தரமான கல்வியை வழங்கத் திட்டமிட்டுள்ளீர்கள்.

ஆனால் தரமான கல்வியை வழங்கத் திட்டமிட்ட அதே நேரத்தில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். அதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கள் முதன்மைச் செயலாளர் தலைமையில் ஒரு குழுவை நாங்கள் அமைக்கிறோம். எந்த குழு என்ன பரிந்துரைகளை வழங்குகிறதோ அது சார்ந்துதான் நாங்கள் முடிவெடுக்க முடியும்’ என்று கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டது.

முதன்மைச் செயலாளர் தலைமையிலான குழுவின் பரிந்துரைகள் வெளியான பிறகு நாங்கள் மத்திய கல்வி அமைச்சரைச் சந்தித்தோம். எங்கள் அரசு அமைத்த குழு பி.எம். ஸ்ரீ திட்டத்தை ஏற்கவில்லை. பி.எம். ஸ்ரீ திட்டத்தின் கீழ் நிதியைக் கேட்கவில்லை, அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ்தான் நிதியைக் கேட்கிறோம் என அவரிடம் தெரிவித்தோம்.

எனவே எந்த ஒரு காரணத்தினாலும் கொள்கையை விட்டுகொடுத்து மத்திய அரசிடமிருந்து நிதி பெற மாட்டோம்’, என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in