
மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் இருந்து பாசனத்திற்காக இன்று (ஜூலை 30) முதல் நீர் திறந்து விட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.
காவிரி நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியான கர்நாடகாவில் கடந்த சில நாட்களாகத் தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை விரைவாக நிரம்பி வருகிறது. மேலும் இன்று மேட்டூர் அணை தன் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூலை 28-ல் டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் இருந்து பாசனத்துக்காக நீர் திறக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் இருந்து திறக்கப்படும் நீரால் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் இருந்து இன்று தொடங்கும் நீர் திறப்பு 13-12-2024 வரை, அதாவது சுமார் 137 நாட்களுக்குத் திறக்கப்படும் என்றும் செய்திக்குறிப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.