சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரியது குறித்து, செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளித்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
இன்று (அக்.16) காலை செய்தியாளர்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் பேசியவை பின்வருமாறு:
`நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரை மிக அதிக கனமழை சென்னையில் பெய்தது. தமிழக முதல்வரின் உத்தரவு மற்றும் ஆலோசனையின் பேரில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், கவுன்சிலர்கள் என அனைவரும் களத்தில் இறங்கி மக்களுக்கு எந்தவித பாதிப்பும் வராத வகையில் அனைத்துவித முயற்சிகளையும் மேற்கொண்டோம்.
இன்று கனமழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது. ஒத்துழைப்பு வழங்கியதற்காக பொதுமக்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து துறையினருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.
இதைத் தொடர்ந்து சென்னையில் மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணிகள் பற்றி வெள்ளை அறிக்கையை வெளியிட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், ` தண்ணீர் நிக்காமல் இருப்பதுதான் வெள்ளை அறிக்கை’ என்றார்.
மேலும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பணியாற்றி வருகிற தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 600 முன்களப்பணியாளர்களுக்கு பிரெட், சிற்றுண்டி, போர்வை உள்ளிட்ட நிவாரண உதவிகளை அவர் வழங்கினார்.
இது தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்ட உதயநிதி ஸ்டாலின், `கனமழையின் தாக்கம் மக்களை நெருங்காமல் இருக்க, இரவு பகல் பாராமல் உழைத்த தூய்மைப் பணியாளர்களை பாராட்டுகிறேன்’ என்றார்.