
விகடன் ஊடக நிறுவனத்தின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியை சித்தரித்து வெளியிடப்பட்ட கார்டூன் இதற்கான காரணமாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபராக கடந்த ஜன.20-ல் பதவியேற்றார் டிரம்ப். இதைத் தொடர்ந்து, அந்நாட்டில் சட்டவிரோதமாக வசித்துவந்த இந்தியர்களில் முதற்கட்டமாக 104 பேர் கடந்த பிப்.6-ல் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார்கள். ராணுவ விமானத்தில் கை, கால்கள் விலங்கிடப்பட்டு அவர்கள் அழைத்து வரப்பட்ட காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளானது.
இதற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டார்கள். இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தும்போது, அவர்களுக்குக் கை விலங்கிடும் நடைமுறை 2012 முதல் அமலில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், நாடு கடத்தப்பட்டு இந்தியாவிற்கு அழைத்துவரப்படுபவர்கள் எந்தவித இன்னல்களுக்கும் ஆளாகக்கூடாது என்று அமெரிக்க அரசிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதன்பிறகு பிப்.13, 14 தேதிகளில் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிபர் டிரம்பைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் பிரதமர் மோடி.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்கள். அப்போது, அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்தியர்களை திரும்ப அழைத்துக்கொள்ளவதாக உறுதியளித்தார் பிரதமர் மோடி. அதேநேரம் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படும் இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு அழைத்து வரப்படும் விவகாரத்தை டிரம்பிடம் மோடி எழுப்பவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், டிரம்பிற்கு முன்பு கை, கால்கள் விலங்கிடப்பட்டிருக்கும் நிலையில் பிரதமர் மோடி அமர்ந்திருப்பதைப் போன்ற சித்தரிக்கப்பட்ட கார்டூன் அட்டைபடத்தைக் கொண்டிருந்த விகடன் ப்ளஸ் இணைய இதழில் ஓரிரு தினங்களுக்கு முன்பு வெளியானது.
பிரதமர் மோடியை அவமதிக்கும் விதத்தில் இந்திய பத்திரிகையாளர்கள் மன்றம் வகுத்துள்ள ஊடக நெறிமுறைகளுக்கு எதிர்மறையாக விகடன் நடந்துகொண்டதாக குற்றம்சாட்டி, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் எல். முருகனுக்கு இன்று (பிப்.15) புகார் கடிதம் எழுதினார் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை.
இந்நிலையில், அவரது கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.