

தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை தியாகராய நகர் தொகுதியில் அதிமுகவின் ஆதரவாளர்கள் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகச் சொல்லி அதிமுகவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சத்தியநாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு, வாக்காளர் பட்டியலில் சரிபார்க்கப்பட்டு மீண்டும் வெளியிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.
மேலும், சென்னை தியாகராய நகரில் 1996-ல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 2,08,349 ஆக இருந்தது. இவர்களில் 1,13,853 வாக்காளர்கள் மட்டுமே கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்துள்ளார்கள். 2021-ல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 2,45,005 ஆக உயர்ந்துள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் வெறும் 36,656 மட்டுமே எப்படி அதிகரித்திருக்க முடியும் என்றும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இது சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் பதிலளிக்கையில், தமிழ்நாடு உள்பட சட்டப்பேரவைத் தேர்தல்களை எதிர்கொள்ளும் மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்வதற்கானப் பணிகள் அடுத்த வாரம் தொடங்கப்படவுள்ளதாகவும் அப்போது தியாகராய நகர் தொகுதி குறித்த குற்றச்சாட்டு கவனத்தில் கொள்ளப்படும் என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைக் கேட்ட சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஒரு வார காலத்துக்கு ஒத்திவைத்தது. மேலும், பிஹாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகல்களைத் தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அங்கு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியலில் 7.4 கோடி வாக்காளர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது. வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டிருந்தது. இறுதி வாக்காளர் பட்டியலில் மேற்கொண்டு 3.7 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது. 21.5 லட்சம் வாக்காளர்கள் பெயர் சேர்க்கப்பட்டது. இவர்களில் பெரும்பாலானோர் புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைந்தவர்கள்.
The Election Commission has informed the Madras High Court that a special intensive revision of the voters’ list will be carried out across Tamil Nadu starting next week.
Madras High Court | Special Intensive Revision | Election Commission |