ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டுக்கு வாருங்கள்: முதல்வர் ஸ்டாலின்

"தமிழ்த்தாயின் குழந்தைகள் நாம் என்பதுதான் நம்முடைய பெரும் அடையாளமாக இருக்கிறது."
ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டுக்கு வாருங்கள்: முதல்வர் ஸ்டாலின்
1 min read

ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டுக்கு வாருங்கள் என அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் சிகாகோவில் நடைபெற்ற சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்கள் சங்கங்களின் சார்பில் அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, சிகாகோவுக்கான துணைத் தூதர் சோம்நாத் கோஷ், அயலகத் தமிழர் நலவாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கங்ங்களின் நிர்வாகிகள், அமெரிக்க வாழ் தமிழர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் உரையாற்றியதாவது:

"எந்த நாட்டுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றாலும், என் எண்ணம் எல்லாம் அங்கு வாழும் நம்முடையத் தமிழர்களைச் சந்திக்க வேண்டும், அங்கு இருக்கும் தமிழ் அமைப்புகளைச் சந்திக்க வேண்டும் என்றுதான் இருக்கும். அப்படி நான் பல்வேறு நாடுகளுக்குச் சென்று தமிழர்களை சந்தித்திருந்தாலும், தமிழ்நாட்டு மக்கள் அதிகமாகப் புலம்பெயர்ந்து வாழும் நாடான அமெரிக்காவில் உங்கள முகங்களைப் பார்க்கும்போது, பேசாமல் அப்படியே நின்று கொண்டு உங்களையே பார்த்துக்கொண்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. அந்தளவுக்கு உங்கள் பாசமும் அன்பும் என்னை கட்டிப்போட்டிருக்கிறது.

தமிழ்த்தாயின் குழந்தைகள் நாம் என்பதுதான் நம்முடைய பெரும் அடையாளமாக இருக்கிறது. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்காக அயலகத் தமிழர் நல வாரியம் உருவாக்கி இருக்கிறோம். ஜனவரி 12-ஐ அயலகத் தமிழர் நாளாகக் கொண்டாடுகிறோம்.

வெளிநாடுவாழ் தமிழர்களுக்காக கட்டணமில்லா உதவி மையம் தொடங்கப்பட்டிருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களின் சொந்த ஊர்களை மேம்படுத்தும் 'எனது கிராமம்' என்ற திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. அயலகத் தமிழர்க்கு கணியன் பூங்குன்றனார் விருது வழங்கப்படுகிறது. அயல்நாடுகளில் பணிக்குச் சென்று, அங்கு இறக்க நேரிடுபவர்களின் குடும்பத்துக்கு நிதி வழங்கப்படுகிறது.

உங்களிடம் நான் கேட்டுக்கொள்வது எல்லாம், ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டுக்குக் குழந்தைகளோடு வாருங்கள். உங்களால் முடிந்த செயல்களைத் தமிழ்நாட்டுக்குச் செய்யுங்கள். தமிழ்நாட்டுக்கு அழைத்து வரும் குழந்தைகளிடம் நம்முடையக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்தான் இங்கு முதல்வராக இருக்கிறார். அவர்தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று சொல்லுங்கள்" என்றார் முதல்வர் ஸ்டாலின்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in