மேட்டுப்பாளையம் ஆணவக்கொலை வழக்கு: வினோத்குமார் குற்றவாளி எனத் தீர்ப்பு!

பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
மேட்டுப்பாளையம் ஆணவக்கொலை வழக்கு: வினோத்குமார் குற்றவாளி எனத் தீர்ப்பு!
1 min read

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற வர்ஷினி பிரியா - கனகராஜ் ஆணவக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வினோத் குமார் குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட வர்ஷினி பிரியா – கனகராஜ் தம்பதியர் கடந்த 2019 ஜூன் மாதத்தில் ஆணவக் கொலை (இரட்டைக் கொலை) செய்யப்பட்டனர்.

கனகராஜின் சகோதரர் வினோத்குமார் தனது கூட்டாளிகள் ஐயப்பன், கந்தவேலு, சின்ராஜ் ஆகியோர் உதவியோடு கனகராஜ் - வர்சினி பிரியா தம்பதியரை வெட்டி படுகொலை செய்தார். இதனைத் தொடர்ந்து வினோத்குமாரும், அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது.

பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவுபெற்ற நிலையில், கனகராஜ் சகோதரர் வினோத்குமாரை குற்றவாளியாக அறிவித்தார் நீதிபதி விவேகானந்தன்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அரசு வழக்கறிஞர் கூறியதாவது,

`இந்த ஆணவக்கொலை தொடர்பாக அன்று கோவை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளராக இருந்தவர் விசாரணை செய்தார். வினோத்குமார் தனது கூட்டாளிகள் ஐயப்பன், கந்தவேலு, சின்ராஜ் ஆகிய நால்வரும் இந்தக் இரட்டைக் கொலையை நிகழ்த்தியுள்ளனர் என்பதை தகுந்த சாட்சியத்துடன் அரசுத் தரப்பில் நிரூபித்தோம்.

வினோத்குமாரும் அவரது கூட்டாளிகளும், கனகராஜ் - வர்சினி பிரியா தம்பதிகளின் இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்து, சாதியை இழிவுபடுத்திப் பேசியதுடன், அவர்களைத் தாக்கிக் கொலை செய்துள்ளனர் என்பதை சாட்சிகளின் உதவியுடன் உறுதியாகியுள்ளது. உச்சபட்ச தண்டனை விதிக்கப்படும் முன்பு அவர்களின் விளக்கத்தைக் கேட்கும் வகையில் வரும் 29-ம் தேதிக்கு விசாரணை நடத்தப்படவுள்ளது’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in