சென்னை, தாம்பரம், ஆவடி எல்லைக்குள்பட்ட இடங்களில் வழிபட்ட 1,878 விநாயகர் சிலைகள் அமைதியான முறையில் கடலில் கரைக்கப்பட்டதாக சென்னை பெருநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
"விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பொது இடங்களில் 1,524 விநாயகர் சிலைகளை நிறுவி உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைபிடித்து வழிபாடு செய்து வந்தனர். வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று காவல் துறையால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் வாகனங்களில் ஏற்றி ஊர்வலமாக எடுத்துச் சென்று
பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம்
நீலாங்கரை, பல்கலைநகர்
காசிமேடு மீன்பிடி துறைமுகம்
திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை பின்புறம்
ஆகிய 4 இடங்களில் கடலில் கரைக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதற்காக, விநாயகர் சிலை ஊர்வல பாதைகள் மற்றும் மேற்படி சிலை கரைக்கும் இடங்களில் 16,500 காவல் துறையினர் மற்றும் 2,000 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சென்னை பெருநகர காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் வழிபாடு செய்த 1,524 விநாயகர் சிலைகளில் 1,277 விநாயகர் சிலைகளும், தாம்பரம் காவல் ஆணையரகத்துக்குள்பட்ட இடங்களில் வழிபாடு செய்த 591 விநாயகர் சிலைகளில் 405 விநாயகர் சிலைகளும் ஆவடி காவல் ஆணையரகத்துக்குள்பட்ட இடங்களில் வழிபாடு செய்த 366 விநாயகர் சிலைகளில் 196 விநாயகர் சிலைகள் உள்பட மொத்தம் 1,878 விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மேற்குறிப்பிட்ட 4 இடங்களில் கடலில் அமைதியான முறையில் கரைக்கப்பட்டன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.