
பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிராகப் போராடும் அப்பகுதி மக்களை சந்திக்க, அங்கு உள்ள தனியார் மண்டபத்திற்கு வருகை தந்தார் தவெக தலைவர் விஜய்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழக அரசுக்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதனை அடுத்து புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் 910 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.
பரந்தூர் பகுதி கிராம மக்களுக்கு அதிமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, பாமக, விசிக, தேமுதிக, நாம் தமிழர், தவாக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், இன்று (ஜன.20) பரந்தூர் பகுதி மக்களைச் சந்திக்க தவெக தலைவர் விஜய்க்குக் காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை கடந்த வாரம் அனுமதி வழங்கியது.
அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், பரந்தூர் பொதுமக்கள் விஜயை சந்திக்கும் இடத்தை முடிவு செய்வதில் குழப்பம் நிலவி வந்தது. இதைத் தொடர்ந்து, நேற்றிரவு காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருடன், தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் ஆலோசனை நடத்தினார்.
இதனை அடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக பரந்தூர் வீனஸ் திருமண மண்டபத்தில் கிராம மக்களையும், போராட்டக் குழுவினரையும் விஜய் சந்திப்பார் என அறிவித்தார் என். ஆனந்த்.
இந்நிலையில், விஜயின் சந்திப்பு நடைபெறும் வீனஸ் திருமண மண்டபத்தைச் சுற்றி இன்று (ஜன.20) காலை முதலே 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். பரந்தூரில் விமான நிலையம் அமையவுள்ள 13 கிராமங்களை சேர்ந்த மக்களை மட்டுமே காவல்துறையினர் திருமண மண்டபத்திற்குள் அனுமதித்துள்ளனர்.
விஜயின் நிகழ்ச்சிக்கு காவல்துறை விதித்த 4 நிபந்தனைகள் பின்வருமாறு,
1) பரந்தூர் விமான நிலையம் அமையவுள்ள 13 கிராமங்களின் குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்.
2) திட்டமிட்டபடி காலை 11.30 மணி முதல் நண்பகல் 12.30 மணிக்குள் நிகழ்ச்சியை நடத்தி முடிக்கவேண்டும்.
3) சட்டம் ஒழுங்கைப் பேண காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
4) பொது மக்களுக்கோ, பொதுச் சொத்துக்கோ பாதிப்பு ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.
இந்நிலையில், நண்பகல் 12.30 மணி அளவில் வீனஸ் திருமண மண்டபத்திற்கு வருகை தந்தார் விஜய். அவருக்குப் பொது மக்களும், தவெகவினரும் உற்சாக வரவேற்பளித்தனர்.