
விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராம மக்கள் வனத் துறை அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராம மக்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் முன்னறிவிப்பின்றி தண்ணீரைத் திறந்துவிடப்பட்டது கிராம மக்களின் புகார் எனத் தெரிகிறது. தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவே, இந்தப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வனத் துறை அமைச்சர் பொன்முடி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் அன்னியூர் சிவா, விழுப்புரம் மாவட்டச் செயலாளர் கௌதம சிகாமணி உள்ளிட்டோர் சென்றிருக்கிறார்கள். அப்போது அமைச்சர் பொன்முடி, காரிலிருந்தபடியே மக்களின் குறைகளைக் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் கோபமடைந்த மக்கள், காரை விட்டு இறங்கமாட்டீங்களா என்று கேட்டு அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி அடித்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், அந்த இடத்தில் லேசான பரபரப்பான சூழல் தென்பட்டது.
இதையடுத்து, அமைச்சர் பொன்முடி காரிலிருந்து இறங்கி, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ததாகத் தெரிகிறது. தேவையானதை செய்து தருவோம் என்று அவர் கூறியதாகவும் தெரிகிறது. சேறு வீசப்பட்டதால், அமைச்சர் பொன்முடி அங்கிருந்து சற்று வேகமாகக் கிளம்பியதாகவும் கூறப்படுகிறது.
மாவட்ட ஆட்சியர் பழனி, மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.