மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக சின்ன உடைப்பு கிராம மக்களை வெளியேற்ற உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக, மாவட்ட நிர்வாகம் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக சின்ன உடைப்பு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் போராடிவந்தனர். இந்நிலையில் மதுரை மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக சின்ன உடைப்பு கிராமத்தைச் சேர்ந்த மலைராஜன், மணி உள்ளிட்ட 258 நபர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.
விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக சின்ன உடைப்பு கிராம மக்களை வலுக்கட்டாயமாக மாவட்ட நிர்வாகம் வெளியேற்றுகிறது எனவும், இந்த விவகாரத்தில் தங்களுக்கு உரிய நோட்டீஸ் வழங்கப்படவில்லை தங்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை, அதேநேரம் இழப்பீட்டுத் தொகை குறைவாக வழங்கப்பட்டுள்ளது எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், தங்களை வெளியேற்ற மாவட்ட நிர்வாகத்திற்குத் தடைவிதித்து உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கிராம மக்கள் குறிப்பிட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த மனு நீதிபதி மாலா முன்பு அவசர வழக்காக இன்று (நவ.20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுதாரர் தரப்பில் விரிவான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த விவகாரத்தில் தொழிற்சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்துதல் சட்டப்பிரிவின்படி முதலில் கிராம மக்களுக்கு நோட்டீஸ் வழங்கவேண்டும், நோட்டீஸை பின்பற்றி நிலத்தை கையகப்படுத்தலாம், ஆனால் அதுவரை கிராம மக்களை வெளியேற்றும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என நீதிபதி மாலா உத்தரவிட்டார்.
உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தவைத் தொடர்ந்து சின்ன உடைப்பு மக்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.