விக்கிரவாண்டி மக்கள் தவறான முடிவை எடுத்துள்ளார்கள்: கே. பாலு

"தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நேர்மையாக நடந்திருந்தால், பாமகதான் வெற்றி பெற்றிருக்கும்."
கோப்புப்படம்
கோப்புப்படம்படம்: https://x.com/PMKAdvocateBalu
1 min read

விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாமக வேட்பாளர் சி. அன்புமணி தோல்வியடைந்ததையடுத்து, மக்கள் தவறான முடிவை எடுத்துவிட்டதாக பாமக வழக்கறிஞர் கே. பாலு தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அந்நியூர் சிவா 1.23 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் சி. அன்புமணி 56 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 10 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார்.

திமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா உள்பட போட்டியிட்டவர்களில் 27 பேர் டெபாசிட்டை இழந்துள்ளார்கள்.

தேர்தல் முடிவு பற்றி பாமக வழக்கறிஞர் கே. பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி மக்கள் தவறான முடிவை எடுத்துள்ளார்கள். உங்களுக்குப் (விக்கிரவாண்டி வாக்காளர்கள்) பணம் கொடுத்து வாக்குகளைப் பெற்ற திமுகவுக்கு நன்றி சொல்வதைவிட, பணத்தைக் கொடுப்பதற்குக் காரணமாக கடும் போட்டியை ஏற்படுத்தி, பணம் கொடுத்தால் மட்டும்தான் வெற்றி பெற முடியும் என்கிற நிலையை உருவாக்கிய பாமகவுக்குதான் இந்தத் தொகுதி மக்கள் நன்றி செலுத்த வேண்டும்.

கொடுப்பவர்களைவிட, கொடுப்பதற்குக் காரணமாக இருந்தவர்கள்தான் போற்றப்பட வேண்டும். ஒரு வாக்காளருக்கு ரூ. 5 ஆயிரத்துக்கு மேல் கொடுத்து திமுக வெற்றி பெற்றுள்ளது. ஆனால், நாங்கள் 1 ரூபாய்கூட கொடுக்காமல் ஜனநாயகத்தை மட்டும் நம்பி, கூட்டணிக் கட்சிகளை மட்டும் நம்பி எங்கள் கூட்டணிக் கட்சிகளை மட்டும் நம்பி, கட்சியின் தொண்டர்களை மட்டும் நம்பி தேர்தலில் நின்றோம்.

இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்ற மனநிலையில் எல்லோரும் இருக்கும்போது, அதை மாற்றுவதற்காக நாங்கள் எடுத்த முயற்சி, மனநிறைவைத் தருகிறது.

அதேவேளையில், தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நேர்மையாக நடந்திருந்தால், பாமகதான் வெற்றி பெற்றிருக்கும். இதுதான் நிதர்சனமான உண்மை. இந்தத் தேர்தலில் பாமக சார்பில் பல்வேறு புகார்களைக் கொடுத்தோம். திமுக மீது நிறைய குற்றச்சாடுகளை வைத்தோம். ஆனால், தேர்தல் ஆணையம் எதற்கும் செவிசாய்க்கவில்லை.

தமிழ்நாட்டில் விக்கிரவாண்டிதான் மிகவும் பின்தங்கிய தொகுதி. ஏழ்மையான மக்கள், குடிசையில் வாழக்கூடியவர்கள். டாஸ்மாக்கில் விற்கக்கூடிய சாராயத்தைக் குடித்துக்கொண்டு வாழக்கூடிய படிப்பறிவு இல்லாத ஏழ்மை நிலையில் இருக்கக்கூடிய அப்பாவி மக்களிடம் பணத்தைக் காட்டி ஏமாற்றி திமுக இந்த வாக்குகளைப் பெற்றுள்ளது. இதற்காக அவர்கள் பெருமைபடக் கூடாது, அவமானம் பட வேண்டும்" என்றார் கே. பாலு.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in