
கடந்த ஜூலை 10-ல் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் 82.48 % வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில் இன்று (ஜூலை 13) காலை 8 மணிக்குத் தொடங்கி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
11 மணி நிலவரப்படி ஐந்தாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில், அன்னியூர் சிவா 38,570 வாக்குகள் பெற்றுள்ளார். அதே நேரம் பாமக வேட்பாளர் சி. அன்புமணி 13,660 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 2,275 வாக்குகளும் பெற்றுள்ளனர். நோட்டாவுக்கு 120 வாக்குகள் கிடைத்துள்ளன.
8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அப்போது சில தபால் வாக்குகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் வாக்கு எண்ணும் அதிகாரிகளுடன் பாமகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஜூலை 10-ல் விக்கிரவாண்டி உள்பட நாடு முழுவதும் 7 மாநிலங்களில் காலியாக இருக்கும் 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் விக்கிரவாண்டியுடன் பிற 12 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.