சமூக ஊடகங்களில் கசிந்த விக்ரமனின் காணொளி குறித்து அவருடைய மனைவி பிரீத்தி விளக்கமளித்துள்ளார்.
பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகி விக்ரமன். இவர் அண்மையில் ஒரு பெரும் சர்ச்சையில் சிக்கினார். விக்ரமன் பெண் வேடம் அணிந்திருந்த காணொளி ஒன்று இணையத்தில் கசிந்தது. மேலும், ஆண்களிடம் தவறாக நடந்துகொண்டதாகவும் காணொளி குறித்து புகார் எழுந்தது.
இதுதொடர்பாக விளக்கமளித்த விக்ரமன், "சினிமா படப்பிடிப்பு சம்பந்தமாக நடந்த ஒன்றைக் கொண்டு அடிப்படை ஆதாரமின்றி அவதூறு பரப்புவோர் மீது சட்டப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், விக்ரமனின் மனைவி பிரீத்தி திருவேற்காடு காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகாரளிக்கவும் செய்துள்ளார்.
இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் இதற்கு முன்பு குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில், படப்பிடிப்பு சம்பந்தமாக ஒரு காணொளியை எடுக்க நேர்ந்தது. நான் வெளியூரில் இருந்தபோது, பதிவு செய்யப்பட்ட காணொளி இது.
அந்தக் காணொளியைத் தேவையில்லாமல் குறிப்பிட்டு, அவதூறு பரப்பும் விதமாக யாரோ பரப்பியிருக்கிறார்கள். அதுதொடர்பாகப் புகாரளிக்க வேண்டும் என்பதற்காக காவல் நிலையம் வந்துள்ளேன். காவல் துறையினர் புகார் மனுவைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.
விக்ரமனைப் பெண் வேடத்தில் பார்த்தவர்கள், எந்தக் கேள்வியும் கேட்காமல் தவறாக நடந்துகொண்டார்கள். அவர்கள் செய்தது தான் சமூகக் குற்றம். நான் விக்ரமனின் மனைவி, படத்தின் இயக்குநர். நான் சென்னை வந்தவுடனேயே, குடியிருப்பில் பராமரிப்பு சார்ந்த நபர்களைச் சந்தித்து இதுகுறித்து கேட்டு தீர்க்கப்பட்டது. இது நடந்து முடிந்து 6, 7 மாதங்கள் ஆகிவிட்டன. நாங்கள் அந்த வீட்டிலேயே தற்போது குடியிருக்கவில்லை.
சம்பந்தமே இல்லாமல் இதைத் தற்போது பிரச்னை ஆக்கியிருக்கிறார்கள். ஏன் பிரச்னையாக்குகிறார்கள் என்றும் தெரியவில்லை" என்றார் அவர்.