விகடன் இணையதளம் முடக்கம்!

பிரதமர் மோடியை விமர்சித்து விகடன் ப்ளஸ் இதழில் வெளியான கார்டூன் தொடர்பாக எழுந்த புகாரைத் தொடர்ந்து முடக்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல்.
விகடன் இணையதளம் முடக்கம்!
படம்: https://x.com/vikatan
2 min read

விகடன் இதழின் இணையதளப் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற பிறகு, சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்ற உத்தரவைப் பிறப்பித்தார். இதன் பகுதியாக சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாகக் கண்டறியப்பட்ட இந்தியர்கள் அமெரிக்க ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்கள். திருப்பி அனுப்பப்படும் இந்தியர்களின் கை மற்றும் கால்களில் விலங்குகள் அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

இதனிடையே, அமெரிக்காவுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இவ்விரு சம்பவங்களையும் இணைத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்பு பிரதமர் நரேந்திர மோடி அமர்ந்திருப்பதைப் போன்றும், அவருடையக் கை மற்றும் கால்களில் விலங்கு அணிவிக்கப்பட்டதைப் போலவும் சித்தரித்து விகடன் இதழின் இணை இதழான விகடன் ப்ளஸ் இதழ் விமர்சன கார்டூனை வெளியிட்டது. இது இதழின் அட்டைப் படமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

விகடன் ப்ளஸ் இதழில் வெளியான இந்த கார்டூனுக்கு கடும் விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்தன. தமிழ்நாடு பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, விகடன் ப்ளஸ் இதழால் வெளியிடப்பட்ட கார்டூன் குறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல். முருகனுக்குக் கடிதம் எழுதியிருந்தார். பிரெஸ் கவுன்சிலுக்கும் அண்ணாமலை கடிதம் எழுதியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை இரவு விகடன் இதழின் இணையதளப் பக்கம் முடக்கப்பட்டது. மத்திய அரசால் இந்தப் பக்கம் முடக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. அண்ணாமலை எழுப்பிய புகாரின் அடிப்படையில் மத்திய அரசால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் கசிந்தன.

இந்நிலையில், விகடன் குழுமம் இதுபற்றி அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

"விகடன் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாகப் பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பல இடங்களில் பலருக்கு விகடன் தளம் வேலை செய்யவில்லை. எனினும், மத்திய அரசிடமிருந்து இதுவரையிலும் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாக எந்த முறையான அறிவிப்பும் வரவில்லை.

முன்னதாக, விகடன் இணைய இதழான 'விகடன் ப்ளஸ்' இதழில் (பிப்ரவரி 10, திங்கள்) அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டதையும் பிரதமர் மோடி அது குறித்து பேசாமல் இருந்ததையும் குறிக்கும் விதமாக ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டு இருந்தது. இது பாஜக ஆதரவாளர்களால் விமர்சிக்கப்பட்டதோடு, பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலையால் விகடன் நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசிடம் புகாராகவும் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், பல இடங்களில் விகடன் இணையதளத்தைப் பயன்படுத்த முடியவில்லை என்று வாசகர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், அரசு தரப்பில் இதுவரை விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக எந்த அறிவிப்பும் வரவில்லை.

நூற்றாண்டு காலமாக விகடன் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எப்போதும் கருத்து சுதந்திரத்தை முன்வைத்தே இயங்குகிறோம், இயங்குவோம்.. ஒருவேளை இந்த அட்டைப்படம் காரணமாக மத்திய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால், அதனையும் சட்டப்படி எதிர்கொள்வோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து சுதந்திரத்துக்காகக் களத்தில் நிற்போம் என்பதை ஹேஷ்டேக்காகவும் விகடன் குழுமம் பயன்படுத்தியுள்ளது.

தமிழ் ஊடகங்களில் மிகவும் புகழ்பெற்றது விகடன் குழுமம். விகடன், ஜூனியர் விகடன், பசுமை விகடன் எனப் பல்வேறு இதழ்களை விகடன் குழுமம் வெளியிட்டு வருகிறது. டிஜிட்டல் தளத்திலும் விகடன் இயங்கி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in