

தமிழ்நாட்டில் தனித்து போட்டியிடவுள்ள விஜயின் தமிழக வெற்றிக் கழகம் புதுச்சேரியில் ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 23 அன்றும், புதுச்சேரிக்கு ஏப்ரல் 9 அன்றும் நடைபெறுகிறது. இதற்காக புதுச்சேரியில் ஏற்கெனவே வேட்புமனுத் தாக்கல் தொடங்கப்பட்டு, இன்றுடன் முடிவடைய உள்ளது. இதில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் தலைமையில் பாஜக, அதிமுக இணைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், திமுக - காங்கிரஸ் இணைந்துள்ள கூட்டணியில் இழுபறியில் உள்ளது. இதனால் திமுகவினரும் காங்கிரஸாரும் தனித்தனியே வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
தவெக - என்.ஆர். காங். கூட்டணி?
மறுபுறம் தமிழ்நாட்டில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிடவுள்ள விஜயின் தமிழக வெற்றிக் கழகம் புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் என்று பேசப்பட்டது. குறிப்பாக, கடந்த ஆண்டு டிசம்பர் 9 அன்று புதுச்சேரியில் விஜயின் பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அனைத்து விதமான அனுமதிகளையும் வழங்கியிருந்தார். அதனைக் குறிப்பிட்டுப் பேசிய விஜய், புதுச்சேரி அரசைப் பார்த்து தமிழ்நாட்டில் திமுக கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும், தவெகவின் பொதுச்செயலாளர் என். ஆனந்த், பலமுறை ரங்கசாமியை சந்தித்து வந்த நிலையில், இந்தக் கூட்டணி சாத்தியமாகும் என்று கருதப்பட்டது. சமீபத்தில் புதுச்சேரியில் தவெக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது.
நேமகவுடன் கூட்டணி அமைத்த தவெக
இதற்கிடையில் தவெக, நேயம் மக்கள் கழகம் என்ற கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளரின் அறிக்கையை, புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் கூட்டணி உடன்படிக்கை என்ற பெயரில் தவெகவின் தலைமை நிலையச் செயலகத்தின் அதிகாரப்பூர எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
“புதுச்சேரியில் நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், புதுச்சேரி மாநில வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, நேயம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜி. நேரு (எ) குப்புசாமி, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் உருளையன்பேட்டை, தட்டாஞ்சாவடி ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகள், கூட்டணியில் சேர்ந்துள்ள நேயம் மக்கள் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Vijay's Tamilaga Vettri Kazhagam has formed an alliance with a party in Puducherry.