
நவம்பர் 8, 2016 அன்று பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். இந்த முயற்சிக்கு திரைத் துறை மற்றும் விளையாட்டுப் பிரபலங்கள் பலர் ஆதரவைத் தெரிவித்தார்கள். இதுதொடர்பாக விஜய் நவம்பர் 15, 2016 அன்று அளித்த பேட்டி தேசிய அளவில் மிகவும் பேசுபொருளானது.
என்ன பேசினார் விஜய்?
"மத்திய அரசு எடுத்த இந்த முடிவு உண்மையில் நல்ல விஷயம்தான். கண்டிப்பாக நம் நாட்டுக்குத் தேவையான, துணிச்சலான, வரவேற்கக்கூடிய ஒரு முயற்சி தான். இது நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நோக்கம் பெரிதாக இருக்கும்போது, அதற்கான பாதிப்புகள் கொஞ்சம் இருக்கதான் செய்யும். பாதிப்புகள் அந்த நோக்கத்தைவிட அதிகமாகிவிடக் கூடாது என்பதை தான் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சில விஷயங்களைத் தவிர்த்திருக்கலாம் என்ற உணர்வு இருக்கிறது. பசிக்கு சாப்பிட முடியாமல், மருந்து மாத்திரைகளை வாங்க முடியாமல், வெளியூர் சென்று திரும்ப வீடு வந்து சேர முடியாமல், அன்றாடம் கிடைக்கும் ரூ. 500, ரூ. 1,000-ஐ வைத்துக்கொண்டு சின்னசின்ன தொழில் செய்யக்கூடிய வியாபாரிகள் உள்பட திரையரங்குகள், வணிக வளாகங்கள், சந்தைகள் என இவர்களெல்லாம் தேவையில்லாமல் பாதிக்கப்படுகிறார்களோ என்ற உணர்வு இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் செய்திகளில் நிறைய விஷயங்களை நான் பார்த்தேன். அவை மனதுக்குக் கஷ்டமாக இருந்தன. பேத்தியின் திருமணத்துக்காக ஒரு பாட்டி, இடத்தை விற்று பணம் கொண்டு வந்திருக்கிறார்கள். அந்தப் பணம் செல்லாது என்பதைக் கேள்விப்பட்டவுடன் அந்தப் பாட்டி தற்கொலை முயற்சி அளவுக்குச் சென்றிருக்கிறார். ஒரு மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தை இருந்திருக்கிறது. இந்தக் குழந்தைக்கு ஏதோ ஒரு பிரச்னை. இதற்குச் சிகிச்சையளிக்க முடியாமல் இந்தக் குழந்தை இறந்துள்ளது. இந்த மாதிரியான சில விஷயங்களைத் தவிர்த்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது.
நாட்டில் 20 சதவீத பணக்காரர்கள் இருப்பார்களா? இதில் ஒரு சிறிய சதவீதத்தினர் செய்யும் தவறுக்காக, மீதமுள்ள 80 சதவீத மக்கள் என்ன செய்தார்கள்?
நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன். இதுவரை யாரும் செய்யாத, யாரும் யோசிக்காத ஒரு சிறப்பான பெரும் முயற்சிதான் இது. இதில் எந்த மாற்றமும் இல்லை, எந்தத் தவறும் இல்லை. ஆனால், இப்படியொரு பிரச்னைக்குத் தீர்வு காணும்போது சட்டத்தை அமல்படுத்தும்போது என்னென்ன பிரச்னைகள் வரும் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு அதற்கான நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இதுதான் என்னுடையத் தாழ்மையான கருத்து.
ஆனால், நிலைமை இன்று சீராகியிருப்பதாக தான் சொல்கிறார்கள். கடந்த 3, 4 நாள்களாக இருந்த பதற்ற நிலை இன்று இல்லை. கிராமங்களில் இன்னும் கொஞ்சம் கஷ்டங்கள் உள்ளன. மூத்த குடிமக்களுக்குக் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்து, அவர்களுடையக் கஷ்டங்களை விரைவாக சரி செய்தால் நன்றாக இருக்கும்" என்று விஜய் பேட்டியளித்தார்.