தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் திருவுருவச் சிலை திறப்பு

இன்று முதல் தேமுதிக தலைமை அலுவலகம், கேப்டன் ஆலயம் என்று அழைக்கப்படும்
தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் திருவுருவச் சிலை திறப்பு
1 min read

இன்று (ஆகஸ்ட் 25) மறைந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் 71-வது பிறந்தநாளாகும். இதை ஒட்டி சென்னை கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் திருவருவச் சிலை திறக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் 28-ல் உடல்நலக்கோளாரால் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல், அவரது கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதை அடுத்து அவரது பிறந்த நாளான இன்று அவரது நினைவிடத்தில் மரியாதை செய்தார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

இதைத் தொடர்ந்து விஜயகாந்தின் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்தார் பிரேமலதா. ஒவ்வொரு வருடமும் விஜயகாந்த் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாகக் கடைபிடித்து வருகிறது தேமுதிக. இதை ஒட்டி நாள் முழுவதும் இன்று தேமுதிக தலைமை அலுவலகத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், இன்று முதல் தேமுதிக தலைமை அலுவலகம், கேப்டன் ஆலயம் என்று அழைக்கப்படும், எனத் தெரிவித்தார். மேலும் எம்.ஜி.ஆர் காது கேளாதோர் பள்ளிக்கு அவர் நிதி உதவி அளித்தார்.

`இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே என்ற கோட்பாட்டின் வழி வாழ்ந்த மனிதநேயப் பண்பாளர், தமிழ்த் திரையுலக வரலாற்றில் தனக்கென தனித்த இடத்தைக் கொண்டவர், தேமுதிக நிறுவனத் தலைவர், மறைந்த அன்புச் சகோதரர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில், திரைவாழ்விலும் பொதுவாழ்விலும் அவர் நிகழ்த்திய சாதனைகளை நினைவுகூர்கிறேன்’ என்று தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in