
நடந்து முடிந்த 18-வது மக்களவைத் தேர்தலில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர். மாணிக்கம் தாகூரை எதிர்த்துப் போட்டியிட்ட தேமுதிகவைச் சேர்ந்த விஜய பிரபாகரன் 4379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இந்நிலையில் விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் வெற்றியை எதிர்த்து விஜய பிரபாகரன் இன்று (ஜூலை 18) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த விஜய பிரபாகரன், `துரோகத்தாலும், சூழ்ச்சியாலும் நான் வீழ்த்தப்பட்டுள்ளதால் அந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க நான் நீதிமன்றம் வந்துள்ளேன். (இந்த வழக்கில்) உரிய நீதி எனக்குக் கிடைக்கும் என்று நாம் நம்புகிறேன்’ என்றார்.
மேலும் மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த நவாஸ் கனி. ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் சுயேட்சையாகப் போட்டியிட்டு 1.6 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்.
இதை அடுத்து ராமநாதபுரத்தில் நவாஸ் கனி வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 18) வழக்கு தொடர்ந்துள்ளார் ஓ. பன்னீர் செல்வம். `ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற நவாஸ்கனி, வேட்பு மனுவில் தன் சொத்துக் கணக்கை முறையாகக் காட்டவில்லை எனவே அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்’ என்று தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார் பன்னீர் செல்வம்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தேர்தல் முடிவுகளில் ஆட்சேபனை இருந்தால், முடிவுகள் வெளியான 45 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். ஜூன் 4-ல் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானது. எனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடர கடைசி நாளான இன்று விஜய பிரபாகரனும், ஓ. பன்னீர் செல்வமும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.