2026 இலக்கை நோக்கி முதல் அடி: தொண்டர்களுக்கு விஜய் கடிதம்

"வி. சாலை என்னும் வியூகச் சாலையில் சந்திப்போம்."
2026 இலக்கை நோக்கி முதல் அடி: தொண்டர்களுக்கு விஜய் கடிதம்
படம்: https://x.com/tvkvijayhq
1 min read

தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களுக்கு விஜய் மூன்றாவது முறையாக கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியிலுள்ள வி. சாலையில் நடைபெறுகிறது. மாநாட்டுக்கான பணிகள் வி. சாலையில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

மாநாடு நடைபெறும் இடத்தில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகியோரது கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளன. பெரியார் மற்றும் அம்பேத்கருக்கு நடுவே விஜயின் கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது. இது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை குறித்த சமிக்ஞையாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களுக்கு கட்சித் தலைவர் விஜய் மாநாடு தொடர்பாக மூன்றாவது கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

"நம் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்காக எழுதும் மூன்றாவது கடிதம் இது.

மாநாடு நிகழப் போகும் தருணம், நம் மனம் மற்றும் கள வளாகத்துக்கு வெகு அருகில் வந்துவிட்டது.

உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கப்போகும் கணங்கள், நம்மிடையே இருக்கும் அன்பின் கனத்தை இன்னும் பலமடங்கு கூட்டப் போகின்றன. அதை வார்த்தைகளில் எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை.

உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு, உலகமே உற்று நோக்கிப் போற்றும் விதமாகக் கொண்டாடுவோம் நம் வெற்றிக் கொள்கைத் திருவிழாவை.

அத்திருவிழாவைக் கொண்டாடுவதற்காக, பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி, பத்திரமாக வாருங்கள். நம் கழகக் கொடியைக் கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள்.

உங்கள் வருகைக்காக வி. சாலை எல்லையில், என் இரு கரங்களையும் விரித்தபடி, இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன்.

வாருங்கள். மாநாட்டில் கூடுவோம்.

நம் தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கைகளைச் செயல்படுத்த உறுதிபூண்டு முழங்குவோம்.

2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம்.

வி. சாலை என்னும் வியூகச் சாலையில் சந்திப்போம்.

வெற்றி நிச்சயம்" என்று விஜய் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in