பரந்தூர் போராட்டக் குழுவினரை சந்திக்கும் விஜய்: மனு அளித்த தவெக!

தவெக விக்கிரவாண்டி மாநாட்டில், பரந்தூர் விமானநிலையத் திட்டத்தைக் கைவிடக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பரந்தூர் போராட்டக் குழுவினரை சந்திக்கும் விஜய்: மனு அளித்த தவெக!
PRINT-91
1 min read

காஞ்சிபுரம் பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அப்பகுதி மக்களை விஜய் சந்திக்கும் வகையில் அனுமதி கோரி, மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் மனு அளித்துள்ளனர் தவெகவினர்.

கடந்த 19 ஆகஸ்ட் 2022-ல் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு ஒப்புதல் கோரி மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் தமிழக அரசின் டிட்கோ நிறுவனம் விண்ணப்பித்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 9 ஜூலை 2024-ல் டிட்கோ நிறுவனத்திற்கு ஒப்புதல் வழங்கியது மத்திய அரசு.

பரந்தூரில் அமையவுள்ள புதிய விமான நிலையத்துக்குக் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் இருந்து சுமார் 5,369 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் 90 சதவீதம் விவசாய நிலமாகும். இதனால் இத்திட்டத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்தாண்டு அக்டோபரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் விக்கிரவாண்டி மாநாட்டில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைத் தமிழக அரசு கைவிடக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பரந்தூர் போராட்டக் குழு சார்பில் விஜய்க்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதை ஒட்டி, வரும் ஜன.19 அல்லது 20 ஆகிய ஏதேனும் ஒரு நாளில், பரந்தூர் போராட்டக் குழுவினரை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் மேற்கண்ட நாளில் போராட்டக்குழுவினரை சந்திக்க அனுமதியும், காவல்துறை பாதுகாப்பும் கோரி தவெக பொருளாளர் வெங்கட்ராமன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் மனுக்களை வழங்கியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in