
கரூர் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கச் செல்லும் விஜய்-க்கு அனுமதி, பாதுகாப்பு வழங்கக்கோரி தமிழக டிஜிபியிடம் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27 அன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் மக்களைச் சந்திக்கும் பிரசாரக் கூட்டத்தை நடத்தினார். இதில் 41 பேர் உயிரிழந்தார்கள். இதன் காரணமாக, விஜயின் மக்களைச் சந்திக்கும் பிரசாரக் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களிடம் தவெக தலைவர் விஜய் காணொளி வாயிலாகப் பேசியதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. நேரில் வருவது பற்றி அவர்களிடம் விஜய் உறுதியளித்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தான் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்க அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
விஜய் அடுத்த வாரம் கரூர் செல்வதற்கான அனுமதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்குமாறு தமிழ்நாடு காவல் துறை தலைவருக்கு செவ்வாய்க்கிழமை மின்னஞ்சல் மூலம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, தவெக வழக்கறிஞர் எஸ். அறிவழகன் இன்று (புதன்கிழமை) தமிழ்நாடு காவல் துறை தலைவர் அலுவலகத்தில் இதுதொடர்பாக நேரடியாக மனு அளித்துள்ளார்.
கடந்த இரு நாள்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் 33 குடும்பங்களிடம் விஜய் பேசியுள்ளதாக அருண்ராஜ் கூறியுள்ளார். மீதமுள்ள குடும்பத்தினரிடம் விஜய் புதனன்று பேசுவார் என்றும் அருண்ராஜ் விளக்கமளித்துள்ளார்.
முன்னதாக, கரூர் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து விஜய் உடனடியாக தனி விமானம் மூலம் திருச்சியிலிருந்து சென்னை திரும்பியது குற்றச்சாட்டாக எழுந்தது. தமிழக வெற்றிக் கழகத்தினர் யாரும் பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனையில் சந்திக்கவில்லை, தேவையான உதவிகளைச் செய்யவில்லை எனக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.
TVK Vijay | Karur Stampede | Karur | Arunraj | DG