தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு: நாளை அறிவிக்கிறார் விஜய்

மாநாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் போன்றவை குறித்துக் கேள்விகளை எழுப்பியிருந்தது காவல்துறை
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு: நாளை அறிவிக்கிறார் விஜய்
1 min read

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்த தகவலை தவெக தலைவர் விஜய் நாளை அறிவிக்கவுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை வரும் செப்.23-ல் நடத்த விழுப்புரம் மாவட்டக் காவல்துறையிடம் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம், மாநாடு தொடர்பான 21 கேள்விகளை எழுப்பி அவற்றுக்குப் பதிலளிக்குமாறு விழுப்புரம் மாவட்டக் காவல்துறை சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

இந்த நோட்டீஸில், மாநாட்டுக்காக மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள், மாநாட்டில் கலந்துகொள்ளும் முக்கியப் பிரபலங்களின் விவரங்கள் போன்றவை குறித்துக் கேள்வி எழுப்பியிருந்தது விழுப்புரம் மாவட்டக் காவல்துறை.

இதை அடுத்து நோட்டீஸில் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்து தவெக சார்பில் விழுப்புரம் மாவட்டக் காவல்துறையிடம் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இன்று வரை தவெக மாநாட்டுக்கான அனுமதியை விழுப்புரம் மாவட்டக் காவல்துறை வழங்கவில்லை.

இந்நிலையில் விக்கிரவாண்டியில் வரும் செப்.23-ல் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்த தகவலை நாளை தவெக தலைவர் விஜய் அறிவிக்கவுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கை குறித்தும், கட்சிக் கொடிக்கான விளக்கம் குறித்தும் விஜய் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in