பகவத் கீதையை பற்றி அம்பேத்கர் எழுதியதை விஜய் படிக்க வேண்டும்: ரவிக்குமார் எம்.பி.

பகவத் கீதையை பற்றி அம்பேத்கர் எழுதியதை விஜய் படிக்க வேண்டும்: ரவிக்குமார் எம்.பி.

பிராமணியத்தை மீட்டெடுத்த எதிர்ப் புரட்சிக்குக் கருத்தியல் மற்றும் தார்மீக நியாயத்தை வழங்குவதற்காக பகவத் கீதை இயற்றப்பட்டது.
Published on

பகவத் கீதையை பற்றி அம்பேத்கர் எழுதியதை விஜய் படிக்க வேண்டும், இல்லாவிட்டால் அம்பேத்கரை வெற்றுக் குறியீடாகப் பயன்படுத்துவதில் போய் முடிந்துவிடும் என்று தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ளார் விசிக எம்.பி. து. ரவிக்குமார். அவர் பதிவிட்டவை பின்வருமாறு:

`தனது கொள்கை வழிகாட்டிகளில் ஒருவராக புரட்சியாளர் அம்பேத்கரை விஜய் குறிப்பிட்டிருக்கிறார். மதச்சார்பின்மைதான் தனது கொள்கை என்று அறிவித்திருக்கும் விஜய், இன்று மாநாட்டு மேடையில் இந்து மதத்தின் குறியீடாக பகவத் கீதையையும், இஸ்லாம் மதத்தின் குறியீடாகக் குர்ஆனையும், கிறிஸ்தவ மதத்தின் குறியீடாக பைபிளையும் நினைவுப் பரிசாகப் பெற்றார்.

பகவத் கீதையைப் பற்றி ‘புரட்சியும் எதிர்ப் புரட்சியும்’ என்ற தனது நூலில் விரிவாக எழுதியிருக்கிறார் விஜய். பௌத்தம் இந்த சமூகத்தில் தார்மீக மற்றும் சமூகப் புரட்சியை ஏற்படுத்தியது. மௌரியப் பேரரசர் அசோகர் பௌத்த மதத்தைத் தழுவியபோது, ​​சமூகப் புரட்சி அரசியல் புரட்சியாக மாறியது.

மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, பௌத்த மன்னர்களால் பாதிக்கப்பட்ட பிராமணர்கள், புஷ்யமித்ர சுங்கனின் தலைமையில் ஒரு எதிர்ப் புரட்சியைத் தொடங்கினார்கள். அந்த எதிர்ப் புரட்சிதான் பிராமணியத்தை மீட்டெடுத்தது. இந்த எதிர்ப் புரட்சிக்குக் கருத்தியல் மற்றும் தார்மீக நியாயத்தை வழங்குவதற்காக பகவத் கீதை இயற்றப்பட்டது என்று தனது நூலில் அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார்.

விஜய் அவர்கள் பகவத் கீதையைப் படிப்பதோடு அதைப்பற்றி டாக்டர் அம்பேத்கர் எழுதியிருப்பதையும் படிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால் அம்பேத்கரை சாரமற்ற வெற்றுக் குறியீடாகப் பயன்படுத்துவதில் போய் அது முடிந்துவிடும்’ என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in