

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்து, முதலமைச்சர் ஸ்டாலின் மகளிருக்கு ரூ. 5,000 வழங்கியுள்ளதை அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு சார்பில் மாதம்தோறும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் பயனாளிகளுக்கு இன்று ரூ. 5,000 வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காணொளி ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்த முதலமைச்சர் ஸ்டாலின், அடுத்த 3 மாதங்களுக்கான உரிமைத் தொகை ரூ. 3,000 மற்றும் கோடைக்காலச் சிறப்புத் தொகை ரூ. 2,000 சேர்த்து ரூ. 5,000 வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இதுகுறித்து கேள்வி எழுப்பி கருத்து தெரிவித்துள்ளார். விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக்காலமா?
“புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன? வழக்கமாக மாதந்தோறும் 15 அன்று வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை, குறிப்பாக இன்று 13-ம் தேதி வரவு வைக்கப்பட்டு அறிவிக்கப்படுவது ஏன்? இத்தனைக்கும் காரணம் வீதிக்கு வீதி மட்டுமில்லாமல், வீட்டுக்கு வீடு ஒலிக்கும் விசில் சத்தம்தான். குறிப்பாக, ஒட்டுமொத்த மகளிரின் விசில் சின்னத்திற்கான பேராதரவு அலையைக் கண்டு உண்டான அச்சம் மட்டுமே இதற்குக் காரணம்.
திமுகவுக்குப் போட்டி தவெகதான்
இப்போதுகூடப் பாருங்கள். ஒன்று மட்டும் உறுதியாகத் தெளிவாகிறது. நாம் மட்டுமே இவர்களுக்கு அச்சமூட்டச் செய்யும் ஆகப்பெரும் வெற்றிக்கான மக்கள் சக்தி. அது மட்டுமா? இவர்களை வலிய நல்லது செய்ய வைக்கும் வலிமையான அரசியல் பெருவிசையும் நாம்தான். அதுமட்டுமா? திமுக. தனக்குப் போட்டியாகக் கருதுவதும் தன்னை வெல்லப் போகும் ஒரே மக்கள் சக்தி எனக் கருதுவதும் தவெகவைத் தான் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உறுதி செய்துள்ளார்.
விஜயின் வருகையால் கிடைத்த உரிமைத் தொகை
எனவே, என்னருமைத் தாய்மார்களே, அக்கா, தங்கைகளே, உங்கள் மகன், உங்கள் அண்ணன், உங்கள் தம்பி விஜயின் அரசியல் வருகையின் தாக்கத்தால் கிடைத்த இந்தத் உரிமைத் தொகையைச் சந்தோஷமாக வாங்கிக்கொள்ளுங்கள். நம் ஆட்சி மலர்ந்ததும், அரசியல் ஆதாயத்திற்காகச் சுயநலமாகச் செயல்படும் இவர்களைப் போலன்றி, உண்மையான அக்கறையுடன் நம் மக்களுக்கு அனைத்து வகைகளிலும் அனைத்து வழிகளிலும் நல்லது மட்டுமே செய்வோம். அது உறுதி. திமுக அரசுக்குத் தேர்தல் தோல்விக்கான திகில் ஊட்டும் அளவிற்கு விசில் ஊதும் தமிழ்நாட்டு மகளிருக்கு என் மனமார்ந்த நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
இவரைத் தொடர்ந்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமியின் பதிவு
“தேர்தல் தோல்வி பயம், பொம்மை முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா? 28 மாதங்களாக ரூ. 1000 கொடுக்காமல் இழுத்தடித்த ஸ்டாலின் அரசு, தற்போது மூன்று மாதத் தொகையோடு சேர்த்து "கோடைக்கால சிறப்புத் தொகை" கொடுக்கிறாராம். 2024, 2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா ஸ்டாலின் அவர்களே? சிறுமி முதல் மூதாட்டி வரை எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை சீர்குலைத்துவிட்டு, இப்போது ‘தேர்தல் நேரத்து பணம்’ வரவு வைக்கும் இந்த ‘Patchwork’ வேலையைத் தமிழ்நாட்டுப் பெண்கள் நம்பி விடுவார்களா என்ன?
பயத்தில் வெளியிட்ட அறிவிப்பா?
செப்டம்பர் 2023 முதல் இதுவரை உங்கள் அரசு கொடுத்த தொகை ரூ. 34,000! ஆனால், உங்கள் ஆட்சியால் ஒவ்வொரு குடும்பமும் இழந்த குறைந்தபட்சத் தொகையே ‘ரூ.3,50,000’! இதை ”விடியா ஆட்சி வீட்டு பில்லே சாட்சி” என்று வீடு வீடாக சென்று அதிமுக அம்பலப் படுத்தி வருவதைக் கண்ட பயத்தில் வருவது தானே இந்த அறிவிப்பு? இப்போது "மாதம் ரூ. 2,000" என்று நான் அளித்த அதிமுக தேர்தல் வாக்குறுதியைக் கண்டதும், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் பயத்தில், இந்த அறிவிப்பு வெளியில் வருகிறது பாருங்கள் மக்களே!
3 மாதங்களில் அதிமுக ஆட்சி
யாரும், எந்தவொரு திட்டத்தையும் தடுக்காத போதிலும், நீங்களாக வந்து "ஐயையோ முடக்கப் பார்க்கிறார்கள்" என்று சொல்வதைப் பார்த்ததால் வேடிக்கையாக இருக்கிறது. "அனைத்து குடும்ப அட்டைக்கும்" என்று வாய்கிழிய அளித்த வாக்குறுதியை 5 ஆண்டுகளாக நிறைவேற்றாமல், தகுதியானவர்களுக்கு மட்டும் என சொல்லி, 1 கோடி தமிழ்ப் பெண்களை நிராகரித்துள்ளீர்கள். தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் இன்னும் மூன்று மாதங்களுக்குள் அமையவுள்ள அதிமுக ஆட்சியில், தமிழ்நாட்டுப் பெண்களுக்கு "குல விளக்குத் திட்டம்" முலம் அனைத்து குடும்பத் தலைவிக்கும் "மாதம் ரூ. 2000" என்று நான் அளித்த வாக்குறுதியானது, கழக ஆட்சி அமைந்தவுடன் அமல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
Political party leaders have criticized Chief Minister Stalin for announcing that the Magalir Urimai Thogai amount will be increased to Rs. 2,000 if the DMK wins the 2026 assembly elections and for providing Rs. 5,000 to women.