தெளிவான பாதையை விஜய் தேர்ந்தெடுக்கவில்லை, இருந்தாலும் அவருக்கு எனது வாழ்த்துகள் என தவெகவின் முதல் மாநில மாநாடு குறித்துப் பேசியுள்ளார் மத்திய இணையமைச்சர் எல். முருகன். இன்று (அக்.29) சென்னையில் அவர் பேசியதாவது,
`அவர் (விஜய்) ஒரு குழப்பமான மனநிலையில் இருப்பது தெரிகிறது. தேசமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று அவர் கூறியிருந்தால் நாம் வரவேற்றிருக்கலாம். தேசத்தையும், தெய்வீகத்தையும் அவர் குழப்பமான சூழ்நிலையில் கையாண்டிருக்கிறார். அதுபோல திராவிடம் தமிழ் தேசியம், இரு மொழிக்கொள்கை குறித்தும் பேசியிருக்கிறார்.
இப்படி அவர் பேசியது முரண்பாடாக இருக்கிறது. இருந்தாலும், என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகிலேயே உள்ள மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ஒரு கட்சியை அவர் ஆரம்பித்திருகிறார். போகப்போகத்தான் அவரது செயல்பாடுகள் தெரியும். அவர் தெளிவான பாதையை தேர்ந்தெடுக்கவில்லை என்பதை அவரது கொள்கையும் கோட்பாடுகளும் காட்டுகின்றன.
திமுக போலியான திராவிட மாடல் ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும். எனவேதான் அந்த போலி திராவிட மாடல் ஆட்சியை அவர் அதிகமாக தாக்கியிருக்கிறார். குடும்ப அரசியலைப் பற்றி பேசியிருக்கிறார். குடும்ப அரசியல் இந்த நாட்டிற்கு எந்த விதத்திலும் தேவை இல்லை.
அவர் தெளிவான பாதையில் செல்லவில்லை இருந்தாலும் அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். மக்கள் அதிகமாகக் கூடும் திருவிழா போன்ற நேரங்களில் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஒரு பெரிய மாநாடு நடந்திருக்கிறது. மக்கள் அதிகமாக செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும்’ என்றார்.