விஜய் பாஜகவின் சி டீம் என தவெக முதல் மாநாட்டில் விஜய் பேசியதற்கு விமர்சனத்தை முன்வைத்துள்ளார் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி. அவர் பேசியதாவது:
`திராவிட மாடல் ஆட்சியின் கொள்கைகளை தமிழக மக்களிடம் இருந்தது அகற்ற முடியாது என்பதை நேற்றைய தினம் அவர் (விஜய்) வெளியிட்டுள்ள ஜெராக்ஸ் காப்பியில் இருந்து தெரிந்துகொள்ள முடியும். அது ஜெராக்ஸ் காப்பிதான். எங்களுடைய கொள்கைகளுக்கு அவர் விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார்.
திராவிட மாடல் ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் முன்னெடுத்துச் செல்லும் கொள்கைகளை தமிழக மக்களிடம் இருந்து யாரும் பிரித்துவிட முடியாது. எங்கள் முதல்வர் உழைப்புக்கு எடுத்துக்காட்டு. உலகத்துக்கே வழிகாட்டும் காலை உணவுத்திட்டம் போன்றவற்றை வழங்கியுள்ள முதல்வருக்கு தமிழக மக்களின் இதயங்களில் தனி இடம் உண்டு.
இதுவரை பல அரசியல் கட்சிகளின் ஏ டீம், பீ டீம் ஆகியவற்றை பார்த்திருக்கின்றோம். தவெக பாஜகவின் சி டீம். தமிழக மக்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ள ஒருவரைப் பற்றி புகழ்ந்து பேசினால் அங்கே எடுபடாது. எனவே ஆளுநரை எதிர்த்துப் பேசினால் அவருக்குக் கொஞ்சம் மரியாதை கிடைக்கும் என்பதால்தான் அவர் அப்படிப் பேசியுள்ளார்.
நான் யாருடைய ஏ டீமும் அல்ல, பீ டீமும் அல்ல என அவர் கூறினார். ஏனென்றால் தான் பாஜகவின் சி டீம் என்பது அவருக்குத் தெரியும். அவர் ஆட்சிக்கு வரட்டும் அதன் பின் ஆட்சியில் பங்கு வழங்குவது குறித்து அவர் அறிவித்ததைப் பார்த்துக்கொள்ளலாம். முதலில் மக்களை சந்திக்க வேண்டும், 234 தொகுதிகளுக்கும் செல்ல வேண்டும், வேட்பாளர்களை நிறுத்தவேண்டும்.
வாக்குகளைப் பெறவேண்டும். பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வரவேண்டும். அதன் பிறகுதான் அதற்கு வாய்ப்பு இருக்கிறது. எங்களின் கூட்டணியை யாரும் பிரித்துவிட முடியாது. அதிமுகவுக்கு தமிழ்நாட்டில் செல்வாக்கு இல்லை என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது. எனவே அங்கிருக்கும் தொண்டர்களை இழுக்கவேண்டும் என்பதே அவரின் குறிக்கோள்.
பாஜகவுக்கு வலுசேர்க்கும் நோக்கில் அதிமுக தொண்டர்களை தன் பக்கம் இழுக்கும் வகையில் அந்த கட்சியைப் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. ஊழல் பற்றி பேசவேண்டுமென்றால் 2011 முதல் 2021 வரை நடந்த ஆட்சி குறித்துதான் பேசவேண்டும். எங்கள் ஆட்சியைப் பற்றிப் பேசும் அளவுக்கு எந்த தவறுக்கும் நாங்கள் இடம் கொடுக்கவில்லை’ என்றார்.