
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு, ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து இன்று (டிச.30) மனு அளித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.
`எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் அண்ணனாகவும், அரணாகவும். எனவே, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள்’ என தன் கைப்பட எழுதிய கடிதத்தை இன்று (டிச.30) காலை வெளியிட்டார் தவெக தலைவர் விஜய்.
இதைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோர் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்து மனு அளித்தனர். இது தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு,
`தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து மனு அளித்தோம். எங்கள் மனுவில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.
மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.
இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்கவேண்டும் என மனுவில் தவெக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளைக் கேட்ட ஆளுநர், அவற்றைப் பரிசீலிப்பதாகக் கூறினார்’ என்றார்.