சகோதரர் சீமான்: பிறந்தநாள் வாழ்த்து கூறிய விஜய்

"ஒன்று திராவிடமாக இருக்க வேண்டும் அல்லது தமிழ் தேசியமாக இருக்க வேண்டும் இரண்டுமாக இருக்க முடியாது என்பதை மிகவும் காட்டமான மொழியில் சீமான் விமர்சித்தார்."
சகோதரர் சீமான்: பிறந்தநாள் வாழ்த்து கூறிய விஜய்
1 min read

நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிறந்தநாளுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 58-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவருக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த வரிசையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும் எக்ஸ் தளப் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்புடைய எக்ஸ் தளப் பதிவில், "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறுவதற்கு முன்பு வரை விஜயை தனது தம்பியாகக் கருதி ஆதரித்து வந்தார் சீமான். நாம் தமிழர் - தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைப்பதற்கான சூழல் இருப்பதாகவே பார்க்கப்பட்டது. மாநில மாநாட்டில் திராவிடமும் தமிழ் தேசியமும் இரு கண்கள் என கொள்கையை வெளியிட்டார் விஜய்.

விஜயின் இந்த நிலைப்பாடு சீமானை சீண்டியது. மாநாட்டுக்குப் பிறகு கட்சிக் கூட்டத்திலும் செய்தியாளர்கள் சந்திப்பிலும் விஜயை வெளிப்படையாக எதிர்க்கத் தொடங்கினார் சீமான். ஒன்று திராவிடமாக இருக்க வேண்டும் அல்லது தமிழ் தேசியமாக இருக்க வேண்டும் இரண்டுமாக இருக்க முடியாது என்பதை மிகவும் காட்டமான மொழியில் சீமான் விமர்சித்தார்.

இதற்குப் பெரிதளவில் எதிர்வினை ஆற்றக் கூடாது என கட்சி நிர்வாகிகளிடம் விஜய் அறிவுறுத்தியதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் சீமானின் பிறந்தநாளுக்கு சகோதரர் சீமான் எனக் குறிப்பிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் விஜய்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in