தமிழக வெற்றிக் கழகம் என அரசியல் கட்சிக்குப் பெயர் வைக்க வேண்டிய காரணத்தை விளக்கும் வகையில், விக்கிரவாண்டி மாநில மாநாட்டில் ஒரு காணொளியை வெளியிட்டார் தவெக தலைவர் விஜய். காணொளியில் அவர் பேசியதாவது:
`நேர்மறை அர்த்தமும், நேர்மறை அடர்த்தியும், நேர்மறை அதிர்வும், நேர்மறை வலிமையும் ஒரே சேர கொண்ட ஒரு சொல் இருக்கிறது. என்றைக்குமே தன்னுடைய தன்மையை இழக்காத சொல் அது. அந்த வார்த்தையை உச்சரிக்கும்போது ஒட்டு மொத்த கூட்டத்தை உணர்ச்சியின் உச்சத்தில் வைக்கும் சொல் அது.
நம் மக்களின் நாடி நரம்புகளில் நானேற்றும் அந்த சொல் `வெற்றி’. வெற்றி என்றால் மனதில் இருக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவது என்று அர்த்தம். அப்படிப்பட்ட ஒரு வார்த்தை நம் கட்சியின் மையச் சொல்லாக மாறி நிற்கிறது. நம் கட்சிப் பெயரின் முதல் சொல் தமிழகம்.
நம் மக்களுக்கான அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் கூறுவது போல ஒரு வார்த்தை நம் கட்சிப் பெயரின் முதல் வார்த்தையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து `தமிழகம்’ என்ற வார்த்தை தேந்தெடுக்கப்பட்டது. தமிழகம் என்றால் தமிழர்கள் வாழும் இடம் என்று கூறலாம். நம்முடைய பல இலக்கியங்களில் இடம்பிடித்த வார்த்தைதான் இந்த தமிழகம். நமது கட்சிப் பெயரின் மூன்றாவது வார்த்தை கழகம்.
`கழகம்’ என்றால் படை பயிலும் இடம் என்று ஒரு அர்த்தம் இருக்கிறது. அந்த வகையில் நம் இளம் சிங்கங்கள் பயிலும் இடம்தான் நம்முடைய கட்சி. அதனால் கழகம் என்ற வார்த்தையும் சரியாக பொருந்தி இருக்கிறது. தமிழகம் வெற்றி கழகம் என இந்த மூன்று வார்த்தைகளைக் கொண்டு மூண்டு எழுந்திருக்கும் அரசியல் உலகின் அணையா பெருஞ்சுடர்தான் `தமிழக வெற்றி கழகம்’.
அது மட்டுமல்லாமல் பெரும் புயலையும் சூறாவளியையும் தனக்குள் ஒளித்து வைத்திருக்கும் `பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற திருக்குறளின் உயிர் நாதமும் சேர்ந்துதான் நம் கட்சியின் அடையாளமாக மாறி நிற்கிறது' என்றார்.