மத்திய அரசுப் பணிகளில் நேரடிப் பணி நியமன நடைமுறை ரத்து செய்யப்பட்டிருப்பது சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணைச் செயலர் முதல் துணைச் செயலர்கள் வரையிலான 45 பணியிடங்களுக்கு நேரடிப் பணி நியமன நடைமுறை (லேட்ரல் என்ட்ரி) மூலம் நிரப்ப யுபிஎஸ்சி சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டது. இதில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதற்கான அம்சங்கள் எதுவும் இல்லை.
இதற்கு ராகுல் காந்தி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட இண்டியா கூட்டணிக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சிராக் பாஸ்வானும் இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி நேரடிப் பணி நியமன நடைமுறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இது சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி என முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
"சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி! இண்டியா கூட்டணி கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்ததைத் தொடர்ந்து நேரடிப் பணி நியமன முறையை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. ஆனால், நாம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டை வலுவிழக்கச் செய்ய மத்திய பாஜக அரசு பல்வேறு வழிகளில் முயற்சிக்கும். இடஒதுக்கீட்டின் உச்ச வரம்பு 50% என்பது உடைக்கப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம்" என்று எக்ஸ் தளப் பக்கத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.