குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: திருச்சி சிவாவை நிறுத்த இண்டியா கூட்டணி முடிவு? | Vice President Election

முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வெளிப்படையாக ஆதரவைக் கோரிய நயினார் நாகேந்திரன்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
2 min read

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனிடையே, இண்டியா கூட்டணி சார்பில் திருச்சி சிவாவை வேட்பாளராக நிறுத்த இண்டியா கூட்டணி முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9 அன்று நடைபெறுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், தமிழ்நாட்டிலிருந்து ஒருவரை வேட்பாளராக அறிவித்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்தாக வேண்டிய சூழல் திமுகவு உருவாகியுள்ளது. சி.பி. ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்காவிட்டால், தமிழர்களுக்கு எதிரான முடிவை திமுக எடுத்ததாக பிரசாரங்கள் மேற்கொள்ளப்படலாம். மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் மு.க. ஸ்டாலின் அலைபேசி வாயிலாகப் பேசி ஆதரவு கோரியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இதனிடையே, இண்டியா கூட்டணி சார்பில் வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக இன்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு முன்பே, குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக எம்.பி. திருச்சி சிவாவை நிறுத்த திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு தமிழருக்கு எதிராக மற்றொரு தமிழர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால், தேர்தலை அது சுவாரஸ்யப்படுத்தும்.

இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளிப்படையான ஆதரவைக் கோரியுள்ளார்.

"குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள தமிழ் மண்ணின் மைந்தரும், மகாராஷ்டிர ஆளுநருமான அண்ணன் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து இண்டி கூட்டணியிலும் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரவு அளிக்க வேண்டும் என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.

தென்னிந்தியாவிலிருந்து ஒரு பெருமைமிகு தமிழரை, மூத்த தலைவரை, குடியரசு துணைத் தலைவர் வேட்பாளாராக தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்துள்ளது. தமிழகத்திற்குக் கிடைத்த முக்கியமான அங்கீகாரம் ஆகும்.

இத்தருணத்தில் இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வை நினைவுபடுத்த விரும்புகிறேன். 2022-இல் நமது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவித்தபோது, ஒடிசா மண்ணின் மகளான அவரை ஒடிசாவின் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் அவர்கள் கட்சி வித்தியாசங்களையும், அரசியல் மாறுபாடுகளை தாண்டி தனது கட்சியினரை வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

பட்நாயக் அவர்களுக்கு அன்றிருந்த பெருந்தன்மையும், மாநிலப் பற்றும் திமுகவிற்கும், அதன் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

ஆகவே, நமது தமிழ் மண்ணின் மைந்தரான அண்ணன் சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு தனது முழு ஆதரவையும் நல்குமாறு முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்!" என்று நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார்.

Trichy Siva | Vice President Election | CP Radhakrishnan | NDA | INDIA Bloc | INDIA Bloc Candidate | NDA Candidate | DMK | BJP

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in