நேதாஜியின் தளபதியாக இருந்தவர் முத்துராமலிங்க தேவர்: சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம் | C.P. Radhakrishnan |

முத்துராமலிங்க தேவர் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்று மட்டும் நினைப்பது அறியாமை...
முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்
முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்
1 min read

நேதாஜியின் தளபதியாக அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அவரது 118-வது பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டுக் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

”முத்துராமலிங்க தேவர் ஒரு சித்த புருஷர். சத்தியத்தையும் வாய்மையையும் தவிர வாழ்க்கையில் எதனையும் கடைபிடிக்காத மகத்தான சித்தர். அவர் ஏதோ ஒரு சமுதாயத்தை மட்டும் சார்ந்தவர் என்று நினைப்பது அறியாமையைக் காட்டுகிறது. அவர் வாழ்ந்த காலத்தில் அத்தனை சமுதாயங்களையும் தன்னோடு அழைத்துச் சென்று தலைமை ஏற்றவர். தன்னுடைய ஜமீன் சொத்தில் பெரும்பகுதியை மாற்று சமூகத்திற்கு தான் தந்திருக்கிறார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மிகச்சிறந்த தேசபக்தர். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தளபதியாக முத்துராமலிங்க தேவர், நேதாஜியின் முழு நம்பிக்கைக்குப் பாத்திரமாய், அவரது பார்வார்ட் பிளாக் அமைப்பில் தன் வாழ்நாள் முழுவதும் பயணித்தார். அவருக்கு முதலமைச்சர் பதவி தருவதாக நேரு சொன்னபோதுகூட எனக்குப் பதவி பெரியதல்ல, என் தலைவன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதுவரை நான் போராடுவேன் என்று சொன்னார் முத்துராமலிங்க தேவர்.

பற்றற்ற பண்பாளரான பசும்பொன் முத்துராமலிங்க தேவரைப் போற்றுவது என்பது தேசியத்தைப் போற்றுவது, தெய்வீகத்தை போற்றுவது, தனி மனித நல்லொழுக்கம் இந்த மண்ணை விட்டு மறையாமல் இருக்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையைப் போற்றுவது.

இந்த ஆண்டு பாரத தேசத்தின் குடியரசு துணைத் தலைவராகப் பொறுப்பேற்கும் வாய்ப்பு கிடைத்து தமிழ்நாட்டிற்கு வந்திருக்கும் பயணத்தில் முத்துராமலிங்க தேவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இருக்க வேண்டும் என்ற உணர்வுடன் வந்திருக்கிறேன். வருங்காலத்தில் எல்லா தேசிய தலைவர்களின் விழாக்களையும் அனைத்து சமுதாயத்தினரும் கொண்டாடும் விழாவாக மாற்ற வேண்டும் என்று அனைத்து சமுதாய மக்களிடமும் நான் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

Summary

Vice President of the India, C.P. Radhakrishnan, has praised Pasumpon Muthuramalinga Thevar as Netaji's commander and a trusted confidant after paying respect on his 118th birthday and Guru pooja

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in