88 வயதில் புதிய கட்சி தொடங்கினார் பண்ருட்டி ராமச்சந்திரன் | Panruti Ramachandran |

இந்த இயக்கம் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடாது...
88 வயதில் புதிய கட்சி தொடங்கினார் பண்ருட்டி ராமச்சந்திரன்
88 வயதில் புதிய கட்சி தொடங்கினார் பண்ருட்டி ராமச்சந்திரன்
2 min read

தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் தனது 88-வது வயதில் ‘எம்.ஜி.ஆர். அதிமுக என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவில் இருந்த மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், புதிய கட்சி தொடங்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், ஏற்கெனவே ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்ததை அடுத்து, பண்ருட்டி ராமச்சந்திரனும் ஓ.பி.எஸ். அணியிலிருந்து விலகி, புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.

எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

இன்று சென்னையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது புதிய கட்சியான எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அறிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

“என்னை வளர்த்து ஆளாக்கிய அறிஞர் அண்ணா என்னை அரசியலுக்கு அழைத்தார். எம்.ஜி.ஆர் என்னைப் அரசியலில் வளர்த்தார். ஆகவே, அவர்கள் போதித்த பாடங்களின் அடிப்படையில், அனைவரும் இன்பமாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்குவது நம்முடைய வரலாற்றுப் பொறுப்பு எனத் தோன்றுகிறது. அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்காகவே இந்த அரசியல் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவது எங்கள் குறிக்கோள் அல்ல. இந்த இயக்கம் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடாது. எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களில் எவரேனும் தேர்தலில் போட்டியிட விரும்பினால், இந்த இயக்கத்தின் கொள்கைகளுக்கு ஒத்துப் போகும் இயக்கத்தில், அவர்களுடைய ஆதரவையும் சின்னத்தையும் பெற்று, சுயேச்சையாகப் போட்டியிடலாம். எம்மை வளர்த்து ஆளாக்கிய தலைவர்களின் பெயர்களைக் கொண்டு, 'எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற இந்த இயக்கத்தை, நல்ல மனதுடனும், நல்ல எண்ணத்துடனும் தொடங்குகிறோம். இந்த அடிப்படைக் கொள்கைகளை மையமாகக் கொண்டுதான் இந்த இயக்கம் ஆரம்பிக்கப்படுகிறது. மெல்ல மெல்ல, படிப்படியாக, காலப்போக்கில் வளர்த்துக்கொண்டு, இந்த நாட்டு மக்கள் இதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

பண்ருட்டி ராமச்சந்திரன் கடந்து வந்த பாதை

மூத்த அரசியல் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதியின் அமைச்சரவைகளில் பணியாற்றியவர். திமுகவில் சட்டமன்ற உறுப்பினராக கடந்த 1967-ல் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதன்பின் 1971 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 1997-ல் அதிமுகவில் இணைந்தார். எம்ஜிஆர் ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவுக்கு வலிமையான அணி உருவாகக் காரணமாக செயல்பட்ட பண்ருட்டி ராமச்சந்திரன், பின் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவை விட்டு விலகி பாமகவில் இணைந்தார். 1991 சட்டப்பேரவைத் தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் 1997-ல் பாமகவிலிருந்தும் விலைகி நல உரிமைக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, 1997 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் இணைந்து தேர்தலை எதிர்கொண்டார்.

2005-ல் விஜயகாந்த் தேமுதிகவைத் தொடங்கிய பின் அவரது கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட பண்ருட்டி ராமச்சந்திரன், அக்கட்சியின் அவைத்தலைவராக இருந்தார். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் வெற்றுபெற்று ஏழாவது முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

2014-ல் மீண்டும் அதிமுகவில் இணைந்த பண்ருட்டி ராமச்சந்திரன், அதிமுகவின் அமைப்புச் செயலாளராக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார். அவரது மறைவுக்குப் பின் சசிகலாவுக்கும், பின்னர் ஓ. பன்னீர் செல்வத்திற்கும் ஆதரவளித்தார். இதனால் அதிமுகவின் தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின் ஓ.பன்னீர் செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவில் இணைந்திருந்த அவர் தற்போது தனது 88 வயதில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.

Summary

Veteran Politician ‘Panruti’ Ramachandran Launched his new party MGR Anna Dravida Munnetra Kazhagam ahead of TN 2026 Elections

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in