

மறைந்த மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது.
சுதந்திரப் போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு, கடந்த சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக உடல்நலப் பிரச்னைகளைச் சந்தித்து வந்தார். தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவர், கடந்த பிப்ரவரி 1 அன்று தீவிர மூச்சுத் திணறல் பிரச்னை ஏற்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தனது 101-வது வயதில் நேற்று (பிப். 25) பிற்பகல் 1:55 மணிக்கு காலமானார்.
நல்லகண்ணுவுக்கு அஞ்சலி
இதையடுத்து, தமிழ்நாடு மட்டுமன்றி, நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலிருந்து, சென்னை தியாகராய நகரில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான பாலன் இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து பாலன் இல்லத்தில் நேற்று முதல் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
அரசு மரியாதை வழங்கப்படும்
முன்னதாக நல்லகண்ணு மறைவுக்காக தான் வெளியிட்ட அஞ்சலிப் பதிவில் அவருக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார். அவரது பதிவில், “மறக்க முடியாத அந்த மாமனிதரின் வாழ்வே நமக்காக அவர் விட்டுச் சென்றிருக்கும் மகத்தான செய்தி. அதுவே நமக்கு வழிகாட்டும் ஒளியாகட்டும்! பாட்டாளி மக்களுக்காகவே வாழ்ந்து நிறைந்த பகட்டில்லாத் தோழர் திரு. நல்லகண்ணு அவர்களின் நினைவும், புகழும் என்றென்றும் காலத்தால் அழியாத கல்வெட்டாக மக்கள் மனதில் நிலைத்திருக்கும்! தமிழ்நாட்டின் உயரிய விருது பெற்ற நம் தகைசால் தமிழரை - இனிய தோழரை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம்" என்று தெரிவித்திருந்தார்.
நல்லகண்ணுவுக்கு அரசு மரியாதை
அதன்படி இன்று மதியம் 2 மணி அளவில் நல்லகண்ணுவின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது “வீர வணக்கம்” என்று முழக்கமிட்டார். தொடர்ந்து 72 குண்டுகள் முழங்க அவரது உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது. நல்லகண்ணு முன்னரே தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிகளுக்காகத் தானம் செய்துள்ளார். இதையடுத்து, அவரது விருப்பப்படி அவரது உடல் சென்னை மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சிக்குத் தானமாக ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் பகிர்ந்துள்ள காணொளியில், ”வாழ்நாள் போராளிக்கு வீரவணக்கம்! தகைசால் தமிழருக்குச் செவ்வணக்கம்!” என்று தெரிவித்துள்ளார்.
The body of the late senior communist leader Nallakannu was accorded state honours with 72 gunshots. His body was then donated to the Medical College.