

வேலூரில் நடந்த தவெக கூட்டத்திற்கு அனுமதி வழங்க தாமதமானது என்று அக்கட்சியினர் கூறுவது உண்மைக்குப் புறம்பானது என்று வேலூர் காவல்துறை விளக்கமளித்துள்ளது.
வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நேற்று (பிப். 23) நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், பரப்புரைக்கு அனுமதி கேட்டு தவெக நிர்வாகிகள் காவல்துறையை அணுகியபோது ஒன்றரை மாதங்களாக அலைக்கழிக்கப்பட்டார்கள் என்று குற்றம்சாட்டினார். இந்நிலையில், அந்தக் குற்றச்சாட்டை மறுத்து, வேலூர் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை வெளியிட்ட விளக்கம்
இது தொடர்பாக வேலூர் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“கடந்த ஜனவரி 28 அன்று, தவெக கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு கூட்டத்தை பிப்ரவரி 08 அன்று நடத்துவதாகவும், அதில் தங்கள் கட்சியின் தலைவர் மற்றும் 25,000 நபர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் அனுமதி கோரி மனு அளித்தார். இதுகுறித்து காவல்துறை சார்பில் ஜனவரி 30 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணையைப் பின்பற்றி, தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட அரசாணை எண்.05-ன் படி நிகழ்ச்சி நடத்துவதற்கு தேவையான அடிப்படை தகவல்கள் கேட்டு கேள்வியுரை வழங்கப்பட்டது. அதன்பின் பிப்ரவரி 05 அன்று தவெக நிர்வாகிகள் சார்பாக "சில தவிர்க்க முடியாத காரணங்களினால் நாள் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது ஆதலால், நாங்கள் எங்கள் தலைமையிடம் கலந்து பேசி பின்னர் மீண்டும் மனு கொடுக்க உள்ளோம்" என மனு அளித்தார்.
நிகழ்ச்சி மாற்றம்
மீண்டும் பிப்ரவரி 06 அன்று, தவெக நிர்வாகிகள் சார்பாக மேற்படி நிகழ்ச்சியை பிப்ரவரி 23 அன்று நடத்துவதாகவும், அதில் சுமார் 25,000 நபர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, நிகழ்ச்சியின் அடிப்படைத் தகவல்களைக் கேட்டு, கேள்வியுரை வழங்கப்பட்டது. அதன்பின் பிப்ரவரி 18 அன்று தவெக சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் “முன்னதாக அளித்த மனுவில் 25,000 பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி கேட்டிருந்தோம். இந்த சந்திப்பில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் 4,900 பேர் கலந்துகொள்ள திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டது. இதையடுத்து, காவல் துறையினரால் பிப்ரவரி 19 அன்று நிகழ்ச்சி நடத்துவதற்குத் தேவையான அடிப்படை தகவல்கள் கேட்டு கேள்வியுரை வழங்கப்பட்டது. அதற்கான தகவல்கள் அடங்கிய பதில்மனுவினை தமிழக வெற்றிக் கழகத்தினர் பிப்ரவரி 20 அன்று சமர்ப்பித்தனர்.
காலதாமதம் இல்லை
தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு 5 நாள்களுக்கு முன் மனு அளித்திருந்த போதிலும் பொது மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தைக் கள ஆய்வு செய்தும், வாகன நிறுத்தமிடங்களை பரிசீலனை செய்தும் பிப்ரவரி 22 அன்று காவல்துறை சார்பில் அனுமதி்க்கான செயல்முறை ஆணை அளிக்கப்பட்டது. காவல்துறை அனுமதி வழங்கியதில் எவ்வித காலதாமதமும் செய்யாமல், மனு அளிக்கப்பட்ட நான்கு நாள்களில் உரிய அனுமதி வழங்கப்பட்டது.
உண்மைக்குப் புறம்பானது
தவெக கட்சி நிர்வாகிகள் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது காவல் துறையினரிடம் அனுமதி பெற கடந்த ஒன்றரை மாதங்களாக போராடியதாகவும், நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 20 மணி நேரத்திற்கு முன்பாகத்தான் காவல் துறையினரால் அனுமதி வழங்கப்பட்டது என கூறியது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
அதிகமானோர் பங்கேற்பு
மேலும், தவெக கட்சியினர் அளித்த மனுவில் கோரப்பட்டபடி 4,900 கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே அனுமதி அளித்து செயல்முறை ஆணை வழங்கப்பட்டது. ஆனால், நிகழ்ச்சியில் மனுவில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கைக்கு மேலாக குறைந்தபட்சம் 10,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக தெரியவருகிறது. இச்செயல் உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட விதிமுறைகளை மீறி செயல்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் காவல்துறையினரால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படா வண்ணம் உரிய ஏற்பாடுகள் செய்து பாதுகாப்பு வழங்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Vellore Police deny claims that there was a delay in granting permission for the TVK officials meeting.