
வரும் மார்ச் முதல் வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை நடைமுறைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை தற்போது பறக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட சென்னை புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் வேளச்சேரிக்கும் பரங்கிமலைக்கும் இடையிலான பறக்கும் ரயில் பாதை அமைக்கும் பணி, கடந்த 2008-ல் தொடங்கப்பட்டது.
பல லட்சம் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ரூ. 495 கோடியில் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்ட நிலையில், நிலம் கையகப்படுத்தவும், புதிய ரயில்பாதை அமைக்கவும் தாமதம் ஏற்பட்ட காரணத்தால், இத்திட்டத்திற்கு ரூ. 734 கோடி செலவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், இந்த வழித்தடத்தில் வரும் மார்ச் மாதத்தில் இருந்து ரயில் சேவை தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் புதிய வழித்தடத்தின் மூலம் சுமார் 5 லட்சம் பயணிகள் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் சென்னைப் புறநகர் மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேற உள்ளது.