
வழக்கத்தை விட சென்னையில் இன்று (நவ.17) காய்கறிகளின் விலையும், மீன்களின் விலையும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
விடுமுறை தினத்தை ஒட்டி இன்று அதிகாலை முதலே காசிமேடு மீன் சந்தையில் பொதுமக்கள் கூட்டம் களைகட்டியது. அதேநேரம் மீன்களின் வருகை அதிகரித்ததாலும், கார்த்திகை மாத பிறப்பாலும், காசிமேடு மீன் சந்தையில் இயல்பைவிட மீன்களின் விலை வீழ்ச்சியடைந்தது.
ஓவ்வொரு நாளும் சென்னை கோயம்பேடு சந்தைக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டுவரப்படுகின்றன. அந்த வகையில் கடந்த மாதம் மழை, விலைச்சல் பாதிப்பால் காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்பட்ட நிலையில் தற்போது கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் காய்கறிகளின் விலையும் குறைந்து காணப்படுகிறது. கடந்த மாதம் தலா ரூ. 200, ரூ. 170 மற்றும் ரூ. 100-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பீன்ஸ், கேரட் மற்றும் கத்தரிக்காய், இன்று (நவ.17) ரூ. 30, ரூ. 50 மற்றும் ரூ. 50-க்கு விற்கப்பட்டது. அத்துடன் பெரிய வெங்காயத்தின் விலையும் குறைந்து ரூ. 80-க்கு இன்று விற்பனை செய்யப்பட்டது. அடுத்த வாரம் காய்கறிகளின் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரம், கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவால் பூண்டு விலை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் ரூ. 300-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பூண்டு, தற்போது ரூ. 380 ஆக அதிகரித்துள்ளது. மேலும், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ பூண்டு ரூ. 400 வரை விற்கப்படுவதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.