
நீண்ட நாள்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தனியார் தமிழ் செய்தித் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா அமுதமொழி நேற்று (ஜூலை 7) உடல்நலக்குறைவால் காலமானார்.
இந்நிலையில் சௌந்தர்யாவின் மரணம் குறித்தும், விழுப்புரம் மாவட்டத்தில் நிலவி வரும் புற்றுநோய் பாதிப்பு குறித்தும் தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார் விழுப்புரம் மக்களவைத் தொகுதியின் விசிக எம்.பி. து. ரவிக்குமார். அவரது பதிவின் சுருக்கம் பின்வருமாறு:
`தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியை சேர்ந்தவர். 23.07.2024 அன்று பிரதமர் நிவாரண நிதியில் உதவி கேட்டு சௌந்தர்யா கடிதம் அனுப்பினார். அதை பிரிண்ட் அவுட் எடுத்து கையொப்பமிட்டு விரைவு தபாலில் அனுப்பி வைத்தேன்.
சௌந்தர்யாவின் குடும்பத்தினர் நேற்று (ஜூலை 25) என் விழுப்புரம் அலுவலகத்திலிருந்து அந்தக் கடிதத்தைப் பெற்றுச் சென்றிருந்தனர். ஆனால் கடிதம் அவரைச் சேரும் முன்பே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த செய்தி என்னை நிலைகுலைய வைத்து விட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து நான் உதவி பெற்றுத் தந்த 225 பேரில் பெரும்பாலானோர் புற்று நோயாளிகள். அந்த நிதி உதவி மூலம் பெற்ற சிகிச்சையினால் பலர் குணமடைந்திருக்கிறார்கள்.
மீண்டும் நான் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த இரண்டு மாதங்களில் 13 பேருக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக பிரதமர் நிவாரண நிதியில் உதவி கேட்டு கடிதம் தந்துள்ளேன்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஏன் இவ்வளவு அதிகமாக புற்றுநோய் பாதிப்பு இருக்கிறது என்பதைப்பற்றி தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை ஆய்வு செய்ய வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’.